யார் இந்த சசிகாந்த் செந்தில்..! ஐஏஎஸ் டூ தேர்தல் பொறுப்பாளர் டூ திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர்..!
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதி மற்றும் புதுச்சேரி என 40 இடங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. தமிழ்நாட்டில் 9 லோக்சபா தொகுதி + புதுச்சேரி என மொத்தம் 10 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டது. இந்த 10 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் திருவள்ளூர் (தனி) தொகுதி மீண்டும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்பியாக டாக்டர் கே ஜெயக்குமார் உள்ளார். இந்நிலையில் தான் வரும் தேர்தலில் அவருக்கு பதில் முன்னாள் கர்நாடகா ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.இவர் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், காங்கிரஸ் கட்சியின் ‘சென்ட்ரல் வார் ரூம்’ தலைவருமான இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
யார் இந்த சசிகாந்த் செந்தில்?
திருவள்ளூரில் சிட்டிங் காங்கிரஸ் எம்பியை மாற்றம் செய்து சசிகாந்த் செந்திலுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது தமிழக அரசியலில் மிகவும் முக்கிய நகர்வாக பார்ககப்படுகிறது. ஏனென்றால் பொதுவாக தமிழகத்தில் வாரிசுகளுக்கும், 60 வயது கடந்தவர்களுக்கும் தான் அதிகளவில் சீட் வழங்கப்படும். ஆனால் அரசியல் பின்புலம் இல்லாத சசிகாந்த் செந்திலுக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கி உள்ளது.
சசிகாந்த் செந்தில் கர்நாடக கேடர் ஐஏஎஸ் அதிகாரி. தன் பணிக்காலத்தில் அவர் கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா, ராய்ச்சூர் மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார். பல்வேறு துறைகளிலும் பணியாற்றியுள்ளார். அதனால் அவருக்கு கர்நாடக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், தேவைகள் என்னவென்பது குறித்த ஆழமான, தெளிவான புரிதல் இருந்துள்ளது.
கடந்த 2019 செப்டம்பரில் தனது பணியை ராஜினாமா செய்த சசிகாந்த் செந்தில், “தேசத்தை கட்டமைக்கும் அடிப்படை அமைப்புகள் சிதைக்கப்படுகின்றன. அவற்றை காப்பாற்ற வேண்டும்’ என்ற காரணத்தை முன்வைத்திருந்தார். பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூகவலைதளப் பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். கர்நாடகத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தமிழக பாஜக தலைவரும் அண்ணாமலை பாஜக சார்பில் தேர்தல் பணிக்காக அனுப்பப்பட்ட அதே வேளையில், காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டது சசிகாந்த் செந்திலே. கட்சியின் கட்டளையை ஏற்று கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கான பணியை கையில் எடுத்தார்.
அதுமட்டுமல்ல பல்வேறு தருணங்களிலும் கர்நாடக மாநிலத்தில் பாஜகவின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். ஹிஜாப் தடை விவகாரம், ஊழல் விவகாரம், முஸ்லிம்களுக்கான 4 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து விவகாரம் என பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் தனது சமூக வலைதள பக்கத்தில் விரிவாக விமர்சித்து வந்துள்ளார். அவை அனைத்துமே அதிக கவனம் பெற்றவை.அதிலும் குறிப்பாக, பா.ஜ.வை 40 சதவீத கமிஷன் அரசு என்று விமர்சித்தது ‘PayCM’ ‘PayMLA’ஆகிய போஸ்டர்களை ஒட்டுவது போன்ற பல விஷயங்களை செய்தது சசிகாந்த் செந்தில் மற்றும் அவரது குழுவின் யோசனை தானாம். குறிப்பாக ‘PayCM’ ‘PayMLA’போஸ்டர்கள் கர்நாடகா மட்டுமின்றி தேசிய அளவிலும் கவனத்தை ஈர்த்தது.
காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி தயாரிப்பிலும் பங்காற்றினார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இருப்பினும் சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் மேலிடத்தின் நம்பிக்கையை பெற்றுள்ள நிலையில் திருவள்ளூரில் அவர் களமிறக்கப்பட்டுள்ளார்.
தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக சசிகாந்த் செந்தில் களமிறக்கப்பட்டுள்ளார்.