யாரை எப்படி, எங்கே பயன்படுத்தனும்னு தெரியும்.. தோனியை புகழ்ந்து தள்ளிய ஆர்சிபி முன்னாள் வீரர்!

மும்பை: இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனிக்கு எந்த வீரரை எந்த இடத்தில் எந்த சூழலில் பயன்படுத்த வேண்டும் என நன்றாக தெரியும் என்று முன்னாள் வீரர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரவீன் குமார் கூறி வரும் தகவல்கள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அணி வீரர்களின் மதுப் பழக்கம், ஆர்சிபி அணிக்காக விளையாட விரும்பாதது, வீரர்கள் நட்புடன் பழகவில்லை, பயிற்சியாளராக யாரும் அழைக்கவில்லை, சொந்த வாழ்க்கை என்று பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி வருகிறார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த வீரரான பிரவீன் குமார், இந்திய அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்ற பின் அறிமுகம் செய்யப்பட்டவர். 2007 முதல் 2012ஆம் ஆண்டு வரை தோனியின் கேப்டன்சியில் ஆடிய வீரர். புதிய பந்தில் ஸ்விங், பழைய பந்தில் கட்டர்ஸ் என்று புதிய பாணியில் பிரவீன் குமார் பந்துவீசியது தோனிக்கு அவர் மீது நம்பிக்கை வர காரணமாக அமைந்தது.
அதேபோல் தோனி அமைக்கும் ஃபீல்ட்-ற்கு ஏற்ப பவுலிங் செய்வதில் பிரவீன் குமார் மிகச்சிறந்த பவுலர். 68 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்டுகளையும்,. 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர். ஆஸ்திரேலிய மண்ணில் சிபி சீரிஸை வெல்வதற்கு பிரவீன் குமார் முக்கிய காரணமாக அமைந்தவர். இந்த நிலையில் தோனியை பற்றி பிரவீன் குமார் பேசி இருக்கிறார்.
அதில், ஒரு வீரரை பற்றி அறிந்து கொண்டு அவரை எப்படி பயன்படுத்த வேண்டும், எந்த சூழலில் பயன்படுத்த வேண்டும் என்பதை நன்றாக அறிந்தவர் தோனி தான். ஒரு ஃபீல்டை அமைத்துவிட்டு, பவுலர்களை பவுலிங் செய்ய அறிவுறுத்துவார். அதுதான் ஒரு சிறந்த கேப்டனுக்கு அழகு. அவர் பவுலரிடம் பந்தை கொடுத்து, பந்துவீச மட்டும் அறிவுறுத்துவார்.