திருமலை திருப்பதியில் யாருக்கு முதல் வழிபாடு தெரியுமா?
திருமாலின் மூன்றாவது அவதாரமான வராக அவதாரம் குறித்து அறிந்திருப்போம். பூமா தேவியை அபகரித்து கடலுக்கடியில் கொண்டு சென்ற இரணியனின் தம்பி இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து பூமி பிராட்டியை காக்க, வராக அவதாரமெடுத்த பகவான் மகாவிஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போரிட்டு அசுரனை வென்று பூமா தேவியை காத்தார் என்பது வரலாறு.
நாடு முழுவதும் வராகப் பெருமானுக்கு பல கோயில்கள் இருந்தாலும் திருமலை திருப்பதியில் உள்ள வராகப் பெருமானின் கோயில் மிகவும் விசேஷமானது. இந்த ஆலயம் முதலில் வராகரின் திருக்கோயிலாகவே இருந்துள்ளது. அங்கே இருக்கக்கூடிய புஷ்கரணிக்கு சுவாமி புஷ்கரணி என்று பெயர். அதன் கரை மேல்அமைந்துள்ளது ஆதி வராக சுவாமி திருக்கோயில். அன்று முதல் இன்று வரை திருமலை திருப்பதியில் முதல் பூஜை வராகப் பெருமானுக்குத்தான்.
‘ஸ்ரீ வேங்கட வராஹாய சுவாமி புஷ்கரணி தடே
சர்வணர்ஷே துலா மாஸே ப்ராதுர்பூதாத்மனே நம’
‘திருவேங்கட மலையில் உள்ள சுவாமி புஷ்கரணியில் ஐப்பசி மாதம் திருவோண நன்னாளில் தோன்றிய வராக பெருமாளுக்கு வணக்கம்’ என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள். பாத்ம புராணத்தில் திருமலை வராக தலமாக இருந்தது விளக்கப்பட்டுள்ளது.
முன்னொரு காலத்தில் பக்தியுடன் இருந்த ஓர் அரசன் தொடர்ந்து பசும்பாலை ஒரு புற்றின் துவாரத்தில் அபிஷேகம் செய்தபோது அதன் உட்பகுதியில் இருந்து வராகப் பெருமான் தோன்றி காட்சியளித்தார் என்பது ஆன்மிக வரலாறாக உள்ளது. ஆயினும், இங்கே ஸ்ரீநிவாச பெருமாளுக்குதான் பிரத்யேக பூஜைகள் நடைபெற்று வருகிறது.
காரணம், ஒரே திருத்தலத்தில் இரண்டு பெருமாளுக்கு முக்கிய பூஜைகள் நடப்பது ஏற்புடையது அல்ல என்பதால் சீனிவாச பெருமாளுக்கு பலிபீட பூஜை, ஹோமம், பிரமோத்ஸவம் முதலியவற்றை நடத்தும்படியான முறைகளை ஸ்ரீ ராமானுஜர் ஏற்படுத்தினார். திருப்பதி சீனிவாசப் பெருமாளுக்கு பூஜைகள் தொடங்குவதற்கு முன்பு வராக பெருமாளுக்கு பூஜை செய்யப்பட வேண்டும் என்பதே நியதி. யாத்திரை செல்பவர்கள் வராக தீர்த்தத்தில் நீராடி வராக விமானத்தை வணங்க வேண்டும் என்றும் இராமானுஜர் வரையறுத்துள்ளார்.