இன்று யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்?
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும் தினம் மிகவும் முக்கியமானது. அதிலும் ஆடி, புரட்டாசி, தை மாதம் வரும் அமாவாசை தினங்கள் மிகவும் விசேஷமானது. ஆடி அமாவாசை அன்று பித்ருக்கள் பித்ரு லோகத்திலிருந்து பூலோகத்திற்கு கிளம்புவதாக ஐதீகம். மகாளய அமாவாசை என்று அழைக்கப்படும் புரட்டாசி அமாவாசை பித்ருக்கள் பூலோகம் வந்தடைந்து, மகாளய பட்ச காலத்தில் தங்கி இருந்து அருள் புரிவார்கள். தை அமாவாசை அன்று பித்ருக்கள் தர்ப்பணம் கொடுக்கும் தம் சந்ததிகளுக்கு நல்லருள் வழங்கி பிதுர் லோகம் திரும்புவதாக ஐதீகம்.
தை அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. மற்ற அமாவாசையில் தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள் தை அமாவாசையில் செய்தால் வருடம் முழுக்க முன்னோர்களுக்கு விரதம் இருந்து படையல் வைத்ததிற்கு சமம் என்பது நம்பிக்கை.
படையல் வைப்பது எப்படி?
1. மறைந்தவர் படத்தை சுத்தம் செய்து வடக்கு அல்லது கிழக்கு நோக்கி வைத்து கொள்ள வேண்டும். சந்தனம், குங்குமம் இடவும். படத்திற்கு துளசி மாலை, வில்வ மாலை சாற்றுவது நல்லது.
2. சிறு தட்டில் மறைந்தவர் பயன்படுத்திய துணி, நகை, கண்ணாடி வைக்கவும்.
3. 2 குத்து விளக்குகள் வைத்து ஒரு முகம் ஏற்றவும். மறைந்தவருக்கு பிடித்த இனிப்பு, காரம், பழங்கள் படையல் வைக்க வேண்டும்.
4. தங்கள் குலவழக்கப்படி முழு தலைவாழையிலை படையல் போடவும்.
5. ஒட்டலில் உணவு ஏற்பாடு செய்திருந்தாலும் படையலுக்காக வீட்டில் சர்க்கரை பொங்கல் செய்வது நல்லது.
6. கோதுமை, தவிடு 2 கிலோ, அகத்திகீரை, வெல்லம், வாழைப்பழம் 3 ஆகியவற்றை கலந்து முந்திய நாளே ஊற வைத்து அமாவாசை அன்று காலையில் பசுவிற்கு தானம் செய்யவும்.
7. முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவை இலையில் வைத்து படையலாக்கலாம். அதேபோல், நம் குடும்ப வழக்கத்தின்படியும் உணவை வைத்துப் படையல் போடலாம்.
8. இப்படி முன்னோர்களுக்குப் படையலிடும் போது, குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து இருந்து, பூஜிக்க வேண்டும். இயலாத பட்சத்தில், கணவனும் மனைவியுமாக சேர்ந்து இந்தப் படையலைப் போடலாம்.
9.பசுவுக்கு அகத்திக்கீரையும் காகத்துக்கு படையலிட்ட உணவையும் வழங்க வேண்டும்.
யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்?
தாய், தந்தை இல்லாத ஆண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
கணவர் இல்லாத பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
அமாவாசை நாளன்று நண்பகல் 12 மணிக்கு முன்பு திதி தர்ப்பணம் கொடுக்க வேண்டும், அதிகாலை நான்கு மணியில் இருந்து கொடுக்க ஆரம்பித்து விடலாம். சூரிய உதயம் முன்பு பிரம்ம முகூர்த்தம் இருப்பதால் சூரியன் வந்தபிறகு கொடுக்க வேண்டும் என்று கிடையாது. பிரம்ம முகூர்த்தத்தில் செய்வது புண்ணியமாகும். ராகு காலம், எம கண்ட நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் தர்ப்பணம் கொடுக்கலாம்.