பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பது யார்..?
முன்னாள் பிரதமர் இம்ரான் ஊழல் வழக்கில் சிறையில் இருந்த நிலையில் அவரது கட்சியின் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 101 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த வியாழன்று பொதுத்தேர்தல் முடிந்தது. 2 நாளாக ஓட்டுக்களை எண்ணும் பணி நடக்கிறது.
மொத்தம் உள்ள 265 இடங்களில் தேர்தல் நடந்த 264 இடங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறையில் உள்ள இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் வேட்பாளர்கள் சுயேட்சையாக களம் இறங்கிய வேட்பாளர்கள் 101 பேர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
முன்னாள் பிரதமர் நவாஸின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியானது 73 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் பெனாசிட் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியானது 54 இடங்களை கைப்பற்றியுள்ளது. முட்டாஹிதா குவாமி இயக்கமானது 17 இடங்களில் இதர சிறிய கட்சிகள் ஒரு சில இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
பெரும்பான்மைக்கு 133 இடங்கள் தேவை. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைக்க இம்ரான் கட்சி ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் தனியாக முயற்சி எடுத்து வருகிறார்கள். அதே போல் நவாஸ், பிலாவல் பூட்டோ இணைந்து தனி அணி அமைத்து ஆட்சி அமைக்க முயற்சி எடுத்து வருகிறார்கள்.