என்னய்யா கபடி கபடி ஆடிட்டு இருக்கீங்க.. காமெடி செய்த பாகிஸ்தான் வீரரை கலாய்த்த ஷிகர் தவான்
வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெறும் இந்த தொடரில் 4 போட்டிகள் முடிந்துள்ளது. அந்த 4 போட்டிகளிலும் சுமாராக செயல்பட்ட பாகிஸ்தானை தோற்கடித்த நியூசிலாந்து 4 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது.
குறிப்பாக 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் சந்தித்த படுதோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகிய பாபர் அசாமுக்கு பதிலாக இத்தொடரில் சாகின் அப்படி கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அவரது தலைமையிலும் எந்த மாற்றத்தையும் சந்திக்காத பாகிஸ்தான் இத்தொடரில் படுதோல்வியை சந்தித்துள்ளது அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.
கலாய்த்த தவான்:
அத்துடன் கடைசியாக விளையாடிய 8 சர்வதேச போட்டிகளில் 8 தோல்விகளை சந்தித்துள்ள பாகிஸ்தான் 2024 புத்தாண்டில் இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியாமல் திணறி வருகிறது. முன்னதாக இத்தொடரின் 3வது போட்டியில் நட்சத்திர பாகிஸ்தான் துவக்க வீரர் முகமது ரிஸ்வான் ஒரு பந்தை எதிர்கொண்டு சிங்கிள் எடுக்க முயற்சித்தார். அப்போது தடுமாறிய அவர் பேலன்ஸ் இழந்து தம்முடைய கையிலிருந்த பேட்டை விட்டு கீழே விழ சென்றார்.
ஆனால் அப்போது தரையில் 2 கைகளையும் ஊன்றி பேலன்ஸ் செய்த அவர் பேட்டை எடுக்காமலேயே ரன் எடுக்க ஓடினார். அதன் காரணமாக எதிர்ப்புறம் இருந்த வெள்ளைக் கோட்டை தன்னுடைய கைவிரல்களால் தொட்ட அவர் மீண்டும் 2வது ரன்னை எடுக்க முயற்சித்த போது எதிரணியினர் ரன் அவுட் செய்ய முயற்சித்தார்கள். இருப்பினும் அதற்கு அசராமல் டைவ் அடித்த ரிஸ்வான் 2 ரன்களை வெற்றிகரமாக எடுத்த மகிழ்ச்சியில் இருந்தார்.