இந்த மாதிரி வழக்குகளில் ஏன் இவ்வளவு மெத்தனப்போக்கு : காவல்துறையை கண்டித்த நீதிபதி..!
வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோரை நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் ஆந்திராவில் கைது செய்தனர். இருவரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் ஜாமீன் கேட்டு கொடுத்த மனுவை மெட்ராஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், ‘மனுதாரர்களுக்கு எதிராக பொய் புகார் அளிக்கப்பட்டிருகிறது. பணிப்பெண்ணை தங்களது வீட்டுப் பெண்ணைப் போல மனுதாரர்கள் நடத்தியுள்ளனர். பணிப்பெண்ணின் கல்லூரி படிப்புக்கான கட்டணத்தை மனுதாரர்கள் செலுத்தியுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் அந்த பெண்ணின் பிறந்தநாளை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர்’ எனக் கூறி அதுதொடர்பான புகைப்படங்களை தாக்கல் செய்தார்.
அப்போது பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மோகன், ‘பணிப் பெண்ணுக்கு மிகவும் கொடூரமாக அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அந்த பெண் விரும்பிய படிப்பைக்கூட படிக்க விடவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்ற பிறகு இந்த வழக்கு தொடர்பாக எந்த ஒரு விசாரணையும் காவல் துறை மேற்கொள்ளவில்லை. புகாருக்கு உள்ளான இருவரிடமும் காவல்துறை விசாரணை கூட நடத்தவில்லை.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டால் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், இந்த வழக்கின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை’ என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, இந்த வழக்கை மார்ச் 1ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும் இதுபோன்ற தனி மனித உரிமை சார்ந்த வழக்குகளில் ஏன் இவ்வளவு மெத்தனப்போக்குடன் காவல்துறை நடந்து கொள்கிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.