உடலில் நாள்பட்ட அரிப்பு ஏன் ஏற்படுகிறது? எப்படி குணப்படுத்துவது
உடலில் ஏற்படும் அரிப்பு பெரும்பாலும் ஒரு தீவிர நோயாக கருதப்படுவதில்லை. அதை தீவிர நோயாக கருதும் எவரையும் நீங்கள் காண முடியாது.
ஆனால், நாள்பட்ட நோயாக அரிப்பு மாறினால், அது பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.
சாதாரண அரிப்பை தவிர, சில தீவிரமான அரிப்பு பிரச்னைகளும் உள்ளன. இந்த வகையான அரிப்பு ஒருவரின் மகிழ்ச்சியையும் அமைதியையும் கூட பறித்துவிடும்.
இதனை நம்புவதற்கு கடினமாக இருக்கலாம். ஆனால், நாள்பட்ட அரிப்பு குணமடையாதபோது அதிலிருந்து ரத்தக்கசிவும் ஏற்படலாம்.
இந்நோய் குறித்து, டெல்லி-என்சிஆரில் உள்ள மேக்ஸ் மருத்துவமனை குழுமத்தின் தோல் மருத்துவரான சௌரப் ஜின்டால் கூறுகையில், “நாள்பட்ட அரிப்பு நோய் ஏற்படுவது எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அது தீவிரமானதாக உள்ளது” என்றார்.
“எங்களிடம் வரும் நோயாளிகளில், அரிப்பைக் குறைக்க உடலின் அந்த பகுதியை மெழுகுவர்த்தியால் எரிப்பவர்களும் உள்ளனர். இதன்மூலம், அந்நோய் எவ்வளவு தீவிரமானது என்பதை அறியலாம்” என்கிறார் அவர்.
மருத்துவத்தில் இது ப்ரூரிகோ நோடுலாரிஸ் (PN) என்று அழைக்கப்படுகிறது . இது பொதுவாக ஆறு வாரங்கள் நீடிக்கும் கடுமையான அரிப்பு நிலை.
அரிப்புடன், சிறுகட்டிகளும் உடலில் தோன்றும். அவை முடிச்சுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த கட்டிகளில் நரம்புகள் உருவாகின்றன. இதனால் இந்த நிலை தீவிரமாகிறது.
பல சமயங்களில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு எந்த வேலையும் செய்ய முடியாமலும் நிம்மதியாக உறங்கக்கூட முடியாத நிலையிலும் உள்ளனர்.
தொடர்ச்சியான அரிப்பு காரணமாக, பலருக்கு தோலில் காயங்கள் ஏற்படுகின்றன மற்றும் ரத்தக்கசிவு கூட ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அரிப்பு ஏற்படும் இடங்களில் எரிச்சலாகவும்ஊசி குத்துவது போன்றும் போன்று உணரத் தொடங்குகிறார்.
ப்ரூரிகோ நோடுலாரிஸ் நோய் ஏற்படுபவர்களில் பலரும் பல எறும்புகள் ஒரே நேரத்தில் கடிக்க ஆரம்பித்தது போல் உணர்கின்றனர். இது திடீரென சிலருக்கு ஏற்படும் கடுமையான அரிப்பிலிருந்து வேறுபட்ட நிலையாகும். ஏனெனில் இந்நோயில் தொடர்ச்சியாக அரிப்பு ஏற்படுகிறது.
இருப்பினும், இது ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாது. அதாவது, இந்நோய் பாதிக்கப்பட்டவரை தொட்டாலோ, நெருங்கினாலோ பரவாது என்பது நிம்மதியான விஷயம். இதனால் இது ஒரு அரிய நோயாகவும் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் அரிய நோய்களுக்கான தேசிய அமைப்பான NORD தரவுகளின்படி, இந்த நோய் உலகளவில் ஒரு லட்சம் பேரில் 22 முதல் 72 பேர் வரை காணப்படுகிறது.