கேரளா திரிபிராயர் ஸ்ரீராம சுவாமி கோயிலுக்கு பிரதமர் மோடி சென்றது ஏன்?

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் வருகிற 22ஆம் தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

இந்த நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோயில், திரிபிராயர் ஸ்ரீராம சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இன்று காலை கொச்சியில் இருந்து திரிசூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூருக்கு ஹெலிகாப்டரில் சென்ற பிரதமர் மோடி, குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். கோயிலில் சுமார் 30 நிமிடங்கள் இருந்த பிரதமர், பின்னர் அங்கிருந்து புறப்பட்டார். முன்னதாக, நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமண விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

தொடர்ந்து, திரிசூர் மாவட்டம் திரிபிராயர் ஸ்ரீராம சுவாமி கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்த பிரதமர் மோடி அங்கிருந்து மீண்டும் கொச்சி புறப்பட்டு சென்றார்.

இரண்டு கோயில்களிலும் பிரதமர் மோடி கேரள பாரம்பரிய உடையில் காணப்பட்டார். கோயிலுக்கு அருகில் ஓடும் திரிபிராயர் ஆற்றில் மீன்களுக்கு உணவளிக்கும் சடங்கான ‘மீனூட்டு’வையும் பிரதமர் மோடி செய்தார். திரிபராயர் ஆற்றில் மீன்களுக்கு உணவளிப்பதன் விஷ்ணுவின் முதல் அவதாரமான ‘மத்ஸ்ய அவதாரத்தை’ வேண்டிக் கொள்வதை குறிக்கிறது.

பிரதமர் மோடியின் கோயில் வருகையின்போது, பிரம்மாஸ்வம் மடத்தைச் சேர்ந்த வேதம் படிக்கும் 21 மாணவர்கள், கோயிலில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் வேதக் கீர்த்தனைகள் மற்றும் ராமாயணம் சார்ந்த பஜனை பாடினர்.

அயோத்தியில் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதற்கு இடையே, பிரதமர் மோடியின் திரிபிராயர் ஸ்ரீராம சுவாமி கோயில் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுகுறித்து விசாரிக்கையில், அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு முன்னதாக தென்னிந்தியாவின் முக்கிய ஸ்ரீராமர் கோயிலான திரிபிரயாருக்குச் செல்லுமாறு பிரதமரிடம் கோவில் தந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடி திரிபிராயர் ஸ்ரீராம சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் என்கின்றனர்.

இரண்டு நாள் பயணமாக நேற்று கேரளா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, கொச்சியின் வில்லிங்டன் தீவில், கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் சர்வதேச கப்பல் பழுதுபார்க்கும் மையம் மற்றும் புதிய கப்பல்துறையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். தொடர்ந்து, மரைன் டிரைவில் இரண்டு அல்லது மூன்று பூத் கமிட்டிகளை உள்ளடக்கிய ‘சக்தி கேந்திரா’களின் சுமார் 6,000 பொறுப்பாளர்கள் கொண்ட பாஜக கட்சி கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *