சுதந்திர இந்தியாவில் காந்தி கொடி ஏற்றாதது ஏன்? காந்திக்கும் தேசிய கொடிக்கும் இருக்கும் தொடர்பு – முழு விவரம்

இந்தியாவின் 75ஆவது குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 1950 ஜனவரி 26 ஆம் தேதி இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நாளையே ஆண்டுதோறும் இந்திய குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் அன்று தேசிய கொடி ஏற்றப்படும். தேசிய கொடி என்பது நாட்டின் ஓர் முக்கியமான அடையாளமாக திகழ்கிறது. இந்த மூவர்ண கொடியின் வடிவமைப்பானது, பல விவாதங்கள் மற்றும் சவால்களுக்கு பின் கொண்டுவரப்பட்டது. இந்த கொடியின் வடிவமைப்பில் பலருக்கும் பங்குண்டு. அதில் முக்கிய பங்களிப்பவர் மகாத்மா காந்தியாகும். கொடியின் வடிவமைபில் காந்தியின் பங்கு பெரும் மாற்றங்களை கொண்டுவந்தது. தற்போது உள்ள மூவர்ண கொடிக்கும் காந்திக்கும் உள்ள தொடர்பு பற்றி இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

கொடியின் ஆரம்ப நிறங்கள் : தேசியவாத இயக்கத்திற்கு காங்கிரஸ் ஒரு கொடியை ஏற்க வேண்டும் என்று விரும்பியபோது, மசூலிபட்டணத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள கல்லூரி மாணவர் பிங்கலி வெங்கய்யா, பல சந்தர்ப்பங்களில் காந்தியை அணுகினார். வெங்கய்யா, காந்திக்கு பல கொடி வடிவமைப்புகளையும், பல்வேறு தேசியக் கொடிகள் பற்றிய தகவல்களையும் வழங்கினார். காந்தி எதிலும் திருப்தி அடையவில்லை.

லாலா ஹன்சராஜ் எனும் ஜலந்தரை சேர்ந்த ஓர் கல்வியாளரின் ஆலோசனையின்படி, தன்னம்பிக்கையை சுட்டிகாட்டுவதற்காக ஒரு கைராட்டையை கொடியில் உள்ளடக்குவது என்பது காந்தியின் அறிவுறுத்தல். பின்னர், சிவப்பு மற்றும் பச்சை நிறங்களும் கொண்ட கொடியை வெங்கய்யா தயாரித்தார். இந்த கொடியை தொடர்ந்து, காந்தி இதில் வெள்ளை நிறத்தை சேர்ந்தார். அனைத்து மதத்தையும் குறிக்கும் வகையில் மேலே வெள்ளை நிறம், இடையில் பச்சை மற்றும் கிழே சிவப்பு ஆகிய நிறங்களுடன் நடுவில் கைராட்டை இடம்பெற்றது. மகாத்மா காந்தி, இக்கொடியை ஒற்றுமையின் சின்னமாக குறிப்பிடுகிறார். மத ஒற்றுமையே நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அவர் நம்பினார்.

கொடியின் நிறத்திற்காக காந்தி சந்தித்த சவால்கள் : , சீக்கியத் தலைவர்கள் அவர்களது மத நிறமான கருப்பையும் தேசிய கோடியில் இணைக்க வேண்டும் என்று கோரி அவர்களது கருத்தை தெரிவித்தனர். இது சில இடங்களில் போராட்டமாகவும் நடைபெற்றது. இதனால் கொடியின் வடிவமைப்பில் குழப்பம் நிலவியது.

இந்த எதிர்ப்பையொட்டி, கொடியில் உள்ள நிறங்களுக்கு புதுவித அர்த்தங்களை காந்தி கொடுத்தார். தியாகத்திற்கு சிவப்பு, தூய்மைக்கு வெள்ளை மற்றும் நம்பிக்கைக்கு பச்சை என்ற குறிப்புகளோடு ஒரு புதிய கொடியை வடிவமைத்தனர். மத ஒற்றுமை மற்றும் வேற்றுமையில் ஒற்றுமையின் சின்னமாக இந்த கொடி பார்க்கப்பட்டது. மத குறிப்புகளற்ற கொடியே எதிர்காலத்திற்கு நல்ல பாதையை கொடுக்கும் என்று காந்தி நம்பினார்.

கொடியில் இடம்பெற்ற காவி நிறம் :

உப்பு சத்தியாகிரகத்தின் மூலம் சுதந்திர போராட்டம் சூடுப்பிடிக்க தொடங்கிய நிலையில், 1931 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி காங்கிரஸ் ஆட்சிக் குழு, 7 நபர்கள் கொண்ட ஒரு கொடிக் குழுவை அமைத்தனர். கொடியில் இடம்பெற்றுள்ள வண்ணங்கள் மத உணர்வை தூண்டுவதாக கருதிய அந்த குழு, ஒரே நிறமாக காவி நிறத்தை கொடியில் உபயோகப்படுத்தும்படி அறிவுறுத்தினர். ஆனால் இந்த அறிவுறுத்தலை காங்கிரஸ் ஏற்கவில்லை. அதனைத்தொடர்ந்து, 1931 ஆம் ஆண்டு கராச்சியில் கூடிய காங்கிரஸ் குழு, பிங்கலி வெங்கையா வடிவமைத்த மூவர்ணக் கொடியை தேசிய இயக்கக் கொடியாக ஏற்றுக்கொண்டனர். இந்த புதிய கொடி மேலே காவி நிறம், நடுவில் வெள்ளை நிறம் மற்றும் கிழே பச்சை நிறத்தையும் கொண்டிருந்தது. அதனுடன் நடுவில் கைராட்டை இடம்பெற்று இருந்தது. காவி நிறம் நாட்டின் வலிமை எனவும், வெள்ளை நிறம், சத்தியம் மற்றும் அமைதி எனவும், பச்சை நிறம், நம்பிக்கை எனவும் பொருளுணரப்பட்டது.

காந்தியின் பார்வையும் நோக்கமும்: ஒரு கொடி, மக்கள் ஒற்றுமைக்குப் பொருத்தமான சின்னமாக இருக்க வேண்டும் என்பதே காந்தியின் நோக்கமாக இருந்தது. “கொடியில் அரசியல் சாயம் இருக்கக் கூடாது” என்பது காந்தியின் கருத்தாகும். அதனை ஒரு கொடியாக மட்டுமல்லாமல், ஒரு புனிதச் சின்னமாகவும் கருதினார். கொடியின் மையத்தில் சுழலும் கைராட்டை, காந்திக்கு மிகவும் விருப்பம் வாய்ந்தது. இது தன்னம்பிக்கை, தன்னிறைவு மற்றும் உழைப்பின் கண்ணியம் ஆகிய கொள்கைகளை குறிப்பிடுவதாகவும், சுழலும் ராட்டை இந்தியாவின் பொருளாதார சுதந்திரம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான சின்னமாகவும் அவர் கருதினார்.

சுதந்திரமும், கொடியின் மாற்றங்களும்:

1930 இல் நேருவால் எடுக்கப்பட்ட பூர்ண ஸ்வராஜ் (முழு சுதந்திரம்) வரலாற்று உறுதிமொழியை நினைவுகூறும் விதமாக ஜனவரி 26 1947 ஆம் நடைபெற்ற விழாவில் மூவர்ணக் கொடியை உயர்த்த காந்தி மறுத்துவிட்டார். எந்த பிரிவினையின்றி ஒன்றினைந்த இந்தியாவைதான் கொடி எடுத்துகாட்ட வேண்டும் என்பதில் காந்தி உறுதியாக இருந்தார். 1947 ஆம் ஆண்டு கவர்னர் மவுண்ட்பேட்டன் காங்கிரஸ் கொடியில் யூனியன் ஜாக் சின்னத்தை இடம்பெற வலியுறுத்தினார். இது ஜவஹர்லால் நேருவால் நிராகரிக்கப்பட்டது. ஆனால், இதற்கு காந்தி ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 1947 ஆம் ஆண்டு தேசிய கொடிக்கான விவாதம் நடத்தப்பட்டப்போது, காங்கிரஸ் கட்சியின் கொடியை தேசிய கொடியாக ஏற்க முடிவெடிக்கப்பட்டது. அதன்படி, பிங்கலி வெங்கையா வடிவமைத்த கொடியில், நடுவில் இருந்த கைராட்டை நீக்கப்பட்டு, தர்ம சக்கரம் அதாவது அசோக சக்கரம் கொண்டுவரப்பட்டது.

சுகந்திர இந்தியாவின் மூவர்ண கொடி : நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட சுதந்திரம் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் கிடைத்தது. இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றார். அதனைத்தொடர்ந்து, புதிய மூவர்ணக் கொடி இந்தியா கேட்டிற்கு அருகில் அமைந்திருந்த இளவரசி பூங்காவில் ஏற்றப்பட்டது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *