பெண்களை விட ஆண்கள் முன்கூட்டியே இறப்பது ஏன்?

உங்கள் வீட்டைச் சுற்றி இருக்கும் முதியவர்களை எல்லாம் கவனித்துப் பாருங்கள். அதில் பாலின ஏற்றத்தாழ்வுகளை நிச்சயம் காண்பீர்கள். ஆண்களை விட பெண்களே அதிகம் இருப்பார்கள். அதாவது பெண்களை விட ஆண்கள் முன்கூட்டியே இறந்திருப்பார்கள். இந்த பாலின பாகுபாடு இந்தியாவில் மட்டுமல்ல உலகம் ழுழுவதும் இருக்கிறது. 2022 ஆம் ஆண்டில் ஜெர்மனியில், ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 78 ஆண்டுகளுக்கு மேல் இருந்தது, அதே சமயம் பெண்களின் ஆயுட்காலம் 82.8 ஆண்டுகளாக இருந்தது.

அமெரிக்காவில், பெண்களின் சராசரி ஆயுட்காலம் 2021ல் 79 ஆக இருந்தது, அதே சமயம் ஆண்களுக்கு 73 வயது என இருந்தது. இடைவெளியானது ஏறத்தாழ சராசரியாக 5.8 வருடம் ஆகும். 1996 ஆம் ஆண்டின் பாலின சமத்துவத்தை ஒப்பிடும்போது இந்த இடைவெளி அதிகமாக இருப்பதும் தெரிந்தது. இதற்கு முதன்மையான காரணம் கோவிட்-19 தொற்றுநோய் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். நவம்பர் 2023ல் JAMA ஜர்னல் ஆஃப் இன்டர்னல் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், தொற்றுநோய் அமெரிக்காவில் உள்ள ஆண்களை அதிகமாக பாதித்தது என தெரிவித்துள்ளது.

ஆண்களின் சராசரி ஆயுட்காலம் குறைய இதுவே முக்கிய காரணமாகவும் இருந்தது என தெரிவிக்கிறது. ஆண்களின் ஆயுட்காலம் குறைவதற்கான மற்ற முக்கிய காரணங்களாக தற்கொலை, போதைப் பழக்கம் மற்றும் வன்முறைக் குற்றங்கள் இருக்கின்றன. குறிப்பாக போதைப் பொருள் பழக்கத்தால் பெண்களை விட இறக்கும் ஆண்களின் விகிதாச்சாரம் மிக அதிகமாக உள்ளது. இதுதவிர, ஆபத்தான வேலைகள், இதய நோய் போன்றவையும் ஆண்களின் முன்கூட்டிய இறப்புகளுக்குக் காரணம்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான ஆயுட்காலம் இடைவெளிக்கு வேறு காரணங்களும் உள்ளன. ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங்கின் வாத நோய் நிபுணரும் மூத்த ஆசிரியருமான ராபர்ட் எச். ஷ்மர்லிங் இதற்கு அளித்துள்ள விளக்கத்தில், சராசரியாக ஆண்கள் வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளைத் தவிர்க்கிறார்கள் என தெரிவித்துள்ளார். பெண்களை விட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற உண்மையையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இதற்கு அடுத்ததாக இருப்பது இதய நோய். அமெரிக்காவில் பெண்களை விட ஆண்கள் இதய நோயால் இறப்பதற்கான வாய்ப்பு 50% அதிகம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரியா, செக் குடியரசு, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்லோவாக்கியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளில் ஆயுட்கால விகிதாச்சாரம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகளையில் குறைவாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஜெர்மனியின் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஃபார் பாப்புலேஷன் ரிசர்ச்சின் ஆசிரியர்கள் குழு ஆய்வு செய்த ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆய்வில் ஆண்களின் இறப்புக்கு இருதய நோய் மற்றும் புற்றுநோய் பிரதான காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செக் குடியரசில், நுரையீரல் புற்றுநோயால் ஆண்கள் அதிகம் இறக்கின்றனர். அதேநேரத்தில் நுரையீரல் புற்றுநோயால் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக விலங்குகளிடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் பெண் மற்றும் ஆண் விலங்குகளுக்கு இடையே பாலின சமத்துவமின்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து, ஆண்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் எனவும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *