தைப்பூசம் எதற்காக கொண்டாடுகிறோம்?

மகர சங்கராந்திக்கு அடுத்ததாக வரும் முதல் பௌர்ணமி நாள் தைப்பூசம் என்று அழைக்கப்படுகிறது. நாட்டின் தென்பகுதியில், இது “தன்ய பௌர்ணமி” – அதாவது, நிறைவடைதலின் பௌர்ணமி என்று அறியப்படுகிறது. சூரியனோடு தொடர்புடைய பூமியின் நிலைப்பாட்டின் காரணமாக, பல விதங்களிலும் அது வருடத்தின் மிகவும் சக்தி நிறைந்த பௌர்ணமியாகக் கருதப்படுகிறது. இயன்ற அளவுக்கு சிறப்பாக வாழ்க்கையை மேம்படுத்த விரும்புபவர்கள், இந்த நேரத்தில் அதிகபட்ச பலனை அடைவார்கள். பன்னெடுங்காலமாக, பொருள் உலகிலும், உணர்ச்சி நிலையிலும், ஆன்மீக நிலையிலும் வெற்றிபெறும் அவர்களது கருவிகளை கூர்தீட்டுவதற்கான ஒரு நாளாக, தைப்பூசத்தை கண்டறிந்துள்ளனர்.

புராணத்தின்படி, முருகன், குமரன், கார்த்திகேயன் மற்றும் சுப்பிரமணியன் என்று அழைக்கப்படும் ஸ்கந்தனிடம், பார்வதி தைப்பூச நாளில்தான் வேல் கொடுத்தார். இந்த ஆயுதத்துடன் துணைக்கண்டம் முழுக்க அவர் போரிட்டு, உலகமே கண்டிராத மாபெரும் போர் வீரனாகப் புகழ் பெற்றார். இப்போதைய பாரதத்தின் எல்லைகளையும் கடந்து, அவர் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர் அனைத்து ஆட்சியாளர்களையும் விஞ்சிய ஒரு பேரரசராக இருந்தார், ஆனால் அவர் எந்த இராஜ்ஜியத்தையும் கைப்பற்றவில்லை. அநீதியை அழிப்பதற்கு உறுதி எடுத்திருந்த காரணத்தால், அவர் போர் புரிவதை மட்டும் நிறைவேற்றினார்.

அந்த இளைஞன் கோபமாக இருந்தான், ஆசிர்வதிக்கப்பட்ட, அளப்பரிய திறமைகளுடன் இருக்கும் ஒருவர் கோபமடையும்போது, அப்படிப்பட்ட விஷயங்கள் நிகழக்கூடும். எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுவதாக அவன் கருதினானோ, அங்கு அவன் கொல்லத் தொடங்கினான். பெரும்பாலான அவனது இளமைப்பருவத்தை கொல்வதிலேயே செலவழித்தான். துணைக்கண்டம் எங்கும் மற்றும் சற்று அதைக் கடந்தும் அவன் அநீதியாளர்களைக் கொன்று குவித்தான். அதன்பிறகே, நீதியும், அநீதியும் எப்போதும் முழுமையானதல்ல என்பதை உணர்ந்தான். பெரும்பாலான நேரங்களில், அது தனிப்பட்ட கண்ணோட்டம் குறித்த கேள்வியாகவே உள்ளது.

ஆழமாக உள்ளே நிலைகொண்டிருந்த சீற்றமே, நீதியை நிலைநாட்டும் போர்வையில் பழிதீர்த்துக்கொண்டது என்பதை ஸ்கந்தன் உணர்ந்தான். நீங்கள் நீதி வழங்குவதாக நினைத்துக்கொண்டு யாரோ ஒருவரைப் பின்தொடரும்போது, அவர்கள் அதைப் பழிதீர்ப்பதாகவே உணர்கின்றனர். வரலாற்றில் ஒருபோதும் மனிதர்கள் முழுமையான நீதியை சாதித்ததில்லை. அது பெரும்பான்மையான நல்லது அல்லது பெரும்பான்மையான தீயதைக் குறித்ததாக மட்டும்தான் இருக்கமுடியும். பெரும்பாலானவர்களுக்கு நன்மையாக இருப்பது, ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தால் அநீதியாகப் புரிந்து, உணரப்படலாம்.

குடும்பத்துக்குள்ளேயும்கூட, எப்போதும் யாராவது ஒருவர் அவருக்கு அநீதி இழைக்கப்படுவதாக உணர்கிறார். முழுமையான நீதி என்பது இல்லை.

தைப்பூசம் எதற்காக கொண்டாடுகிறோம்?
அது ஸ்கந்தனின் கதை. புராணங்களின் கூற்றுப்படி, ஸ்கந்தனுக்கு தைப்பூசத்தன்று அவனது ஆயுதம் கிடைத்ததால், அவன் வெற்றிகரமாக இருந்தான். இறுதியில், அவனது நோக்கம் சரியல்ல என்ற உணர்தலை அவன் அடைந்தான். அவன் தன் நோக்கத்தில் தோல்வியடைந்ததால்… உலகின் மற்ற எந்த நிலப்பகுதியாக இருந்திருந்தாலும் அவன் தோல்வியடைந்த ஒருவனாகத்தான் கருதப்பட்டிருப்பான். ஆனால் இந்தக் கலாச்சாரத்தில், பொருள்ரீதியான விஷயங்களையோ, அவன் அடைந்த வெற்றிகளின் எண்ணிக்கையையோ அல்லது அவனது நோக்கம் முழுமை பெறாமல் போனதையோ கருதாமல், அவன் தன்னையுணர்ந்த பேருண்மையை, ஒரு மகத்தான வெற்றியாக நாம் கருதுகிறோம். தென்னிந்தியா முழுவதும் அவனது தந்தை சிவனைவிட, இவனை அதிகமாக வழிபடுகின்றனர்.

வெற்றியடைதல் குறித்த நமது கருத்து, கைப்பற்றுவது அல்ல. வெற்றி குறித்த நமது கருத்து என்னவென்றால், விரிவடைந்து நம்மை நாமே கரைத்துக்கொள்வது. இது பக்தி விளைந்த மண். பக்தியின் இலக்கு கரைந்துபோவது. கரைதலுக்கான ஒரு வழியாக நாம் வேறு ஏதோ ஒரு பொருளைப் பயன்படுத்திக்கொள்ளலாம், ஆனால் பக்தியின் அடிப்படையான நோக்கம் கரைந்துபோவது. ஒரு புனிதயாத்திரையைத் தொடங்குவதற்கு, தைப்பூசம் மிகச் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், இயன்றவரை ஒவ்வொரு வழியிலும் நம்மை நாமே குறைத்துக்கொள்வதற்கு புனித யாத்திரை, ஒரு செயல்முறையாக இருக்கிறது.

தமிழ்நாட்டின் பழனிமலை மீதும், மற்றும் பல இடங்களிலும் இருக்கும் முருகன் கோவிலுக்கு நூற்றுக்கணக்கான மைல்கள் பாதயாத்திரை செல்லும் மக்களைக்கொண்ட, துடிப்பான புனிதயாத்திரைக் கலாச்சாரம் இன்னமும் தென்னிந்தியாவில் இருக்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *