வீட்டு வாடகை ஒப்பந்தம் போடுவது ஏன் அவசியம்? சாதகமான ஒப்பந்தம் போடுவது எப்படி?

வீட்டு வாடகை ஒப்பந்தம் வீட்டு உரிமையாளருக்கும், குடியிருப்பவருக்கும் சட்ட ரீதியான பாதுகாப்பை தரக் கூடியது. வாடகை ஒப்பந்தம் போடுவது கட்டாயம் என்கிறது அரசு. ஆனால் பெரும்பாலான வீட்டு உரிமையாளர்களும் வாடகைக்கு குடியிருப்பவர்களும் ஒப்பந்தம் போடுவது கிடையாது. பின்னாளில் பிரச்னை வரும் போது தான் ஒப்பந்தம் போடாமல் விட்டது தவறு என உணர்கின்றனர்.

சட்ட பாதுகாப்பு தரும் ஒப்பந்தம்: வீட்டு வாடகை ஒப்பந்தம், வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு குடியிருப்பவர் இருவரின் நலனையும் கருத்தில் கொண்டு போட வேண்டும். ஒப்பந்தமானது வாடகைக்கு குடியிருப்பவர் மற்றும் உரிமையாளர் ஆகிய இரு தரப்பும் பரஸ்பரம் ஒப்புக் கொண்ட விஷயங்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். பெரும்பாலும் வாடகை ஒப்பந்தம் உரிமையாளருக்கு சாதகமாகவே இருப்பதாக விமர்சனங்களும் எழுகின்றன. இதற்கு லீவ் அண்ட் லைசென்ஸ் வாடகை ஒப்பந்தம் சரியான தீர்வாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

லீவ் அண்ட் லைசென்ஸ் வாடகை ஒப்பந்தம்: சொத்தின் உரிமையாளர் மற்றும் வாடகைக்கு குடிவருபவர் இடையே போடப்படும் ஒப்பந்தம் இது. இரு தரப்புக்கும் இடையிலான அனைத்து அம்சங்களும் இதில் இடம்பெற்றிருக்கும். முகவரி, வீட்டின் வகை மற்றும் அளவு ஆகியவற்றை உள்ளடக்கியது. அதுமட்டுமின்றி மாத வாடகை, டெபாசிட் தொகை, ஒப்பந்தத்தின் காலம், ஒப்பந்தத்தை முடித்து கொள்வதற்கான இரு தரப்பிற்குமான நிபந்தனைகள் இடம்பெற்றிருக்கும். இது ஒப்பந்தம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது தான் முக்கியம். ஒப்பந்தம் இல்லாத பட்சத்தில் உரிமையாளர் நினைத்த நேரத்தில் வாடகையை உயர்த்தும் வாய்ப்பை பெறுகிறார்.

வாடகை ஒப்பந்தத்தில் , மாதந்தோறும் எந்த தேதியில் வாடகை செலுத்தப்படும் என்பது இடம்பெற்றிருக்க வேண்டும். ஒருவேளை வாடகை செலுத்துவது தாமதமானால் என்ன செய்ய வேண்டும், எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை வாடகை உயர்த்தப்படும், மெயிண்டனென்ஸ் கட்டணம், தண்ணீர் கட்டணம் ஆகியவற்றை யார் செலுத்துவது என்பன உள்ளிட்டவை வாடகை ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டும்.

ஒப்பந்தத்தை பதிவு செய்வது அவசியம்: வாடகைக்கு குடியிருப்பவர் வீட்டின் மீது உரிமை கொண்டாடாமல் இருக்க, வாடகை ஒப்பந்தத்தை போட்டு அதனை பதிவு செய்வது முக்கியம். அதே போல வீட்டை காலி செய்வது பற்றி எத்தனை நாட்களுக்கு முன் கூற வேண்டும் என்பது கட்டாயம் இடம்பெற வேண்டும் என்கின்றனர் வழக்கறிஞர்கள்.

வீட்டை வாடகைக்கு விடும் , உரிமையாளர் தரப்பில் வீட்டில் என்னென்ன சாதனங்கள் , என்ன பொருட்கள் வழங்கப்பட்டன என்பதும் வாடகை ஒப்பந்த பத்திரத்தில் இடம்பெற வேண்டும். இரு தரப்பும் தங்களுக்கான நிபந்தனைகளை முறையாக பேசி ஒரு மித்த கருத்தோடு ஒப்பந்தம் போட வேண்டும். அந்த ஒப்பந்தத்தை பதிவு செய்வதோடு மட்டுமில்லாமல் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்வது மிக மிக முக்கியம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *