போகிப் பண்டிகை கொண்டாடுவது ஏன்..! நம் முன்னோர்கள் சொன்னது என்ன..?
வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.
அன்றைய நாள், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்.
இவற்றோடு பழைய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் “ருத்ர கீதை ஞான யக்ஞம்” என அழைக்கப்படும் அக்னி குண்டத்தில் எறிந்து பொசுக்கி வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
முந்தைய காலங்களில் மக்கள் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் இயற்கை சார்ந்ததாக இருந்ததும். மண் பாண்டங்கள், தென்னை மரத்தின் மட்டைகளில் செய்த பொருட்களில் செய்ததாக இருந்தது. இவற்றை ஒரு வருடம் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் போகிப் பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்கும் வழக்கம் இருந்தது.
ஆனால் இன்றைய நவீன காலத்தில் போகிப் பண்டிகை அன்று ஏதாவது பழைய பொருட்களை எரிக்க வேண்டும் என பிளாஸ்டிக் போன்ற இயற்கையை மாசுபடுத்தம் பொருட்களை எரித்து, காற்றை மாசை ஏற்படுத்துகிறோம்.
புதிய விஷயங்களை வரவேற்கும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் போது நம்முடைய மனதையும் தூய்மையாக வைத்துக் கொண்டு, புதியவற்றை வரவேற்க தயாராக வேண்டும்.
போகி பண்டிகை அன்று வீட்டில் உள்ள தூசி, ஒட்டடை ஆகியவற்றை துடைத்து சுத்தப்படுத்த வேண்டும். பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களை எடுத்து தண்ணீரால் துடைத்து, மீண்டும் அதே இடத்தில் வைத்து மஞ்சள், குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும். வீட்டின் வாசலில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். அதோடு கடைகளில் விற்கும் கூரைப் பூ வாங்கி அதோடு வேப்பிலை அலைகளை சேர்த்து வீட்டின் வாசலில் கட்டி, பொங்கலை கொண்டாட தயாராக வேண்டும்.
போகி பண்டிகையன்று எடுத்து துடைத்து சுத்தம் செய்து வைத்த சுவாமி படங்களில் மீண்டும் தெய்வீக தன்மையை கொண்டு வர, பூஜை செய்வது அவசியமாகும்.