கார் சீட்டில் உள்ள பிளாஸ்டிக் கவரை ஏன் உடனடியாக அகற்ற வேண்டும்? – பலருக்கும் தெரியாத பயனுள்ள தகவல்!
புதிய கார்கள் வாங்கும் பலரும் சில பழக்கங்களை விடாப்பிடியாக கடைபிடிப்பார்கள். குறிப்பாக புதிய கார்களின் சீட்களை மூடப்பட்டிருக்கும் பாலிதீன் கவர்களை குறிப்பிட்ட காலம் வரை எக்காரணம் கொண்டும் அப்புறப்படுத்தமாட்டார்கள். இந்த கவர் இருந்தால் என்ன கெட்டுவிடப் போகிறது என நினைத்தே பலரும் அப்படியே வைத்திருப்பார்கள். ஆனால் இதனால் நமக்கோ, காருக்கோ எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? புதிய கார்களின் சீட்களில் உள்ள இந்தப் பாலிதீன் கவர்களை ஏன் உடனடியாக அகற்ற வேண்டும் என்ற காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
பாதுகாப்பு:
எல்லாவற்றையும் விட முதலில் பயணிகளின் பாதுகாப்பிற்குதான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தற்போது வரக்கூடிய நவீன வாகனங்கள், அதிலும் குறிப்பாக ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் பல ஏர்பேக் வசதிகளோடுதான் வருகின்றன. காரில் பயணிப்பவர்களின் பாதுகாப்பை அதிகப்படுத்த, இந்த ஏர்பேக்குகள் அனைத்தும் சீட்டிற்குள் திணிக்கப்பட்டிருக்கும். ஒருவேளை உங்கள் காரின் சீட் பாலிதீன் கவரால் மூடப்பட்டிருந்தால் எமர்ஜென்சி சமயத்தில் ஏர்பேக் வெளியே வருவதில் தடை ஏற்படக் கூடும். இதனால் காரில் பயணிப்பவரக்ளின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக அமையும்.
வசதி அதிகமாகும்:
பாலிதீன் கவர்களை அகற்றுவதால் நமக்கு கிடைக்கும் இன்னொரு சௌகர்யம் இருக்கையில் அமரும் வசதி அதிகமாகும். பாலிதீன் கவர் மூடப்பட்ட சீட்களில் அமர்வதற்கும் வெறும் சீட்களில் அமர்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. மேலும் பாலிதீன் கவர் இருந்தால், நம்மால் ஒழுங்காக அமர முடியாது. வளைவுகளிலோ அல்லது திடீரென பிரேக் பிடித்தாலோ சீட்டில் இருப்பவர்கள் வழுக்கிக் கொண்டு செல்லும் வாய்ப்புள்ளது. இதனால் சில சமயங்களில் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
தீங்கு நிறைந்த வாயுக்கள்:
கடைசியாக, இந்த பாலிதீன் கவர்களிலிருந்து நம் உடல்நலத்திற்கு தீங்கிழைக்கும் வாயுக்கள் வெளியாகின்றன. அதுவும் குறிப்பாக கோடை காலங்களில் காரின் உள்ளேயும் வெப்பநிலை அதிகமாக இருக்கும். ஆகையால் இந்த சமயத்தில் சீட்டில் உள்ள பாலிதீன் கவர்களும் சூடாகி அபாயகரமான வாயுக்களை வெளியே கசியவிடுகின்றன. இந்த வாயுக்களை அதிகமாக நாம் சுவாசிக்கும் போது, நீண்ட கால நோக்கில் நம் உடல்நிலை பாதிக்கவும் வாய்ப்புள்ளது.
சீட்களை தூசி படாமல் பாதுகாக்க தானே இதுபோல் பாலிதீன் கவரால் மூடியுள்ளார்கள் என நாம் நினைக்கலாம். இதிலிருக்கும் நன்மைகளை விட இதனால் நமக்கு ஏற்படும் ஆபத்துகளையே நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பாலிதீன் கவர்களை கார் வாங்கி வந்தவுடன் அகற்றுவதால், பாதுகாப்பான டிரைவிங் அனுபவத்தை உறுதி செய்வதோடு நமது வசதிக்கும் ஆரோக்கியத்திற்கும் நாம் பங்களிப்பு செய்திருக்கிறோம் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.