வெளிநாட்டுக்கு போய் வேலை செய்து வளமான எதிர்காலத்தை உருவாக்கனுமா? இந்த நாடு தான் சிறந்ததாம்!

வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இந்தியாவை விட நல்ல ஊதியம், வேலைவாய்ப்பு , செல்வத்தை பெருக்கி கொள்ளலாம் என்பன உள்ளிட்ட காரணங்களுக்காக தான் பலர் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அப்படி வெளிநாடு சென்று செல்வத்தை பெருக்க நினைப்பவர்களுக்கான செய்தி தான் இது.

முதலிடத்தில் சுவிட்சர்லாந்து: வளமான எதிர்காலம் வேண்டும், பல தலைமுறைகளுக்கு தேவையான செல்வத்தை கட்டி எழுப்ப வேண்டும் என நினைப்பவர்களுக்கு எந்தெந்த நாடுகளில் அதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து, குடியுரிமை ஆலோசனை நிறுவனமான ஹென்லே & பார்ட்னர்ஸின் புதிய புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 88 சதவிகிதத்தை பெற்று சுவிட்சர்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது.

எதன் அடிப்படையில் முடிவு?: ஒரு நாட்டில் உள்ள ஆறு காரணிகளின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. வருமானம் ஈட்டும் திறன், வேலையில் முன்னேற்றம், வேலைவாய்ப்புகள், பிரதான கல்வி, பொருளாதார நிலை மற்றும் வாழ்வாதார சூழல் ஆகிய ஆறு வெவ்வேறு அளவுகோல்களை கொண்டு இந்த குறியீடு மதிப்பிடப்பட்டுள்ளது.

88% வாய்ப்புகளை வழங்கும் சுவிட்சர்லாந்து: சுவிட்சர்லாந்தில் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பு என்பது 100 புள்ளிகளாக இருக்கிறது. அதே போல வேலைவாய்ப்பு 94 புள்ளிகள், வேலையில் முன்னேற்றம் 95 புள்ளிகள் என முக்கியமான மூன்று அளவுகோல்களிலும் முதலிடத்தை பிடித்துள்ளது சுவிட்சர்லாந்து.

வாழ்வாதார சூழல் மற்றும் பொருளாதார நிலையில் 75 புள்ளிகளையும், பிரதான கல்வியில் 72 புள்ளிகளும் என சுவிட்சர்லாந்த் மிகச்சிறந்த வாய்ப்புகள் நிறைந்த நாடாக உள்ளது.

இரண்டாமிடத்தில் அமெரிக்கா: அமெரிக்காவை பொறுத்தவரை வேலைவாய்ப்பு, முன்னேற்றம், செல்வம் சேர்ப்பது என மொத்தமாக 82 சதவிகித வாய்ப்புகளை வழங்கி 2ஆவது இடத்தை பிடித்துள்ளது. வேலைவாய்ப்பு என வரும் போது சுவிட்சர்லாந்துக்கு நிகராக அமெரிக்காவும் 94 புள்ளிகளை பெற்றுள்ளது.

ஆனால் வருவாய் ஈட்டும் திறனில் 93 புள்ளிகள், வேலையில் முன்னேற்றம் அளிக்கும் வாய்ப்புகளில் 86 புள்ளிகள் மற்றும் வாழ்வாதார சூழலில் 68 புள்ளிகள் என சுவிட்சர்லாந்தை விட குறைவாக உள்ளது.

சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவிலும் சிறந்த வாய்ப்பு: வளமான எதிர்காலத்தை உருவாக்கும் வாய்ப்புகள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் மூன்றாமிடத்தை பிடித்துள்ளது. இங்கே மொத்த வாய்ப்புகளின் விகிதம் 79 சதவிகிதமாக உள்ளது. 75 சதவிகிதத்துடன் ஆஸ்திரேலியா நான்காம் இடத்தையும், 74 சதவிகிதத்துடன் கனடா ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளது.

இந்தியா எந்த இடத்தில் உள்ளது?: நல்ல வேலைவாய்ப்பு, தொழில் முன்னேற்றம், வருவாய் ஈட்டும் திறன் உள்ளிட்ட 6 காரணிகளை அடிப்படையாக கொண்ட சிறந்த வாய்ப்பளிக்கும் நாடுகளில் இந்தியா வெறும் 32 சதவிகிதத்தை மட்டுமே பெற்றுள்ளது.

கிரீஸ் நாட்டை விட இந்தியா குறைவான புள்ளிகளை பெற்றுள்ளது. இந்தியாவில் பொருளாதார நிலைக்கு வெறும் 8 புள்ளிகளும், வேலையில் முன்னேற்றம் கிடைக்கும் வாய்ப்புகளில் 43 புள்ளிகளும் மட்டுமே கிடைத்துள்ளன.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *