மன்னருக்கு புற்றுநோய் என தெரியவந்த பிறகாவது ஹரியும் வில்லியமும் இணைவார்களா? மனோதத்துவ நிபுணரின் பதில்
பிரித்தானிய மன்னர் சார்லசுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவரைக் காண்பதற்காக 5,000 மைல்களைக் கடந்து, ஓடோடிவந்துள்ளார் அவரது இளைய மகனான ஹரி.
சகோதரர்கள் இணைவார்களா?
ஹரியின் பிரித்தானிய வருகை, தங்கள் தந்தைக்கு புற்றுநோய் என தெரியவந்ததைத் தொடர்ந்தாவது ஹரியும் வில்லியமும் இணையக்கூடும் என்ற நேர்மறையான எண்ணத்தை அவர்களுடைய நலம் விரும்பிகளிடையே உருவாக்கியுள்ளது. பலரும், பிரித்தானியா வந்த ஹரியும், அவரது அண்ணனான இளவரசர் வில்லியமும் சந்திப்பார்களா என ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
குடும்பத்தைப் பிரிந்து மேகனுடன் ஹரி அமெரிக்கா சென்றுவிட்ட நிலையில், அவருக்கும், அவரது அண்ணனான வில்லியம் மற்றும் சொந்த சகோதரி போல பழகிய இளவரசி கேட்டுக்கும் இடையே பெரும் பிரிவு ஏற்பட்டுவிட்டது. தற்போது ஹரி பிரித்தானியா வந்துள்ளதைத் தொடர்ந்து, தங்கள் தந்தைக்கு புற்றுநோய் என தெரியவந்ததைத் தொடர்ந்தாவது ஹரியும் வில்லியமும் இணைவார்களா என்னும் கேள்வி ராஜ குடும்ப ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
மனோதத்துவ நிபுணரின் பதில்
அந்தக் கேள்விக்கு மனோதத்துவ நிபுணரான Dr Pam Spurr என்பவர் பதிலளித்துள்ளார். மன்னர் சார்லசுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தாங்கள் சந்தித்துக்கொள்ளும் திட்டம் எதுவும் ஹரிக்கும் வில்லியமுக்கும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
சகோதரர்களுக்கிடையிலான போர் முடிவதற்கான அடையாளம் எதுவும் தென்படவில்லை என்று கூறியுள்ள Dr Pam Spurr, உண்மையில் நமக்கெல்லாம் ஒரு மோசமான தகவல் என்னவென்றால், தங்கள் தந்தைக்கு சீரியஸான நோய் வந்துள்ள நிலையிலும், ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்த வில்லியமும் ஹரியும், இப்போது நட்பாக இருப்பது போல் காட்டிக்கொள்வதற்கான வழியைக் கூட கண்டுபிடிக்கவில்லை என்கிறார்.
இது ஒரு சோகமான சூழ்நிலைதான். ஆனாலும், அது அசாதாரணமான ஒன்றல்ல என்று கூறும் அவர், ஆழமானதாகிவிட்ட ஒரு குடும்பப் பகையை குறைத்து எடை போட்டுவிடக்கூடாது, அது, பிரிந்தவர்கள் மீண்டும் இணையக்கூடாதபடிக்கு கசப்பான ஒன்றாக மாறிவிடும் என்கிறார்.