பூங்காற்று திரும்புமா… தமிழ் தலைவாஸ் ஜெயிக்குமா? – வர்ணனையாளர் ரகு கருத்து
Pro Kabaddi League | Tamil Thalaivas: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் களமாடி வரும் சாகர் ரதி தலைமையிலான தமிழ் தலைவாஸ் இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 2ல் வெற்றி, 7ல் தோல்வி என 13 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது.
தமிழகத்தின் சென்னையை தளமாகக் கொண்ட தமிழ் தலைவாஸ் அணி 5வது பி.கே.எல் தொடரில் அறிமுகமானது. தொடக்க சீசனிலே அணி பலத்த பின்னடைவை சந்தித்தது. அதன்பிறகு நடந்த நடந்த 3 சீசன்களிலும் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை தான் பிடித்தது. ஆனால், கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்ட அணி, பயிற்சியாளர் அஷன் குமாரின் தலைமையில் முதன்முறையாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. இருப்பினும், அரையிறுதியில் போராடி தோல்வியுற்றது.
எனினும், இந்த சீசனில் கோப்பையை வெல்லும் வேட்கையுடன் போட்டிக்கு முன்னதாக நடந்த ஏலத்தில் செயல்பட்டது. நட்சத்திர வீரரான பவன் செராவத்தை அணியில் இருந்து வெளியேற்றி இருந்தாலும், ஏலத்தில் இளம் மற்றும் அனுபவம் கலந்த வீரர்களை வசப்படுத்தியது. இதனால், தமிழ் தலைவாஸ் ரசிகர்களும் அணி இந்த சீசனை புரட்டி போடும் என ஆவல் கொண்டனர்.