மீண்டும் இந்தியாவுக்குள் நுழையும் ஃபோர்டு..?

பிரபல அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ‘ஃபோர்டு மோட்டார்ஸ்’ நிறுவனம் இரண்டாம் முறையாக இந்தியாவில் வலதுகால் வைக்க உள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவை விட்டு ஃபோர்டு வெளியேறியபோது, எஸ்யூவி ரக கார்களை விரும்பும் இந்தியர்கள் ஏமாற்றமடைந்தனர். ஃபோர்டு நிறுவனம் தனது பிரபல ‘எஸ்கார்ட்’ என்ற செடான் ரகத்துடன் இந்தியாவில் செயல்படத் தொடங்கியது.
இந்த மாடல் மட்டுமன்றி ஐகான், ஃபிகோ மற்றும் ஈகோஸ்போர்ட் போன்ற மாடல்கள் இன்னமும் இந்திய சாலைகளை ஆண்டு வருகின்றன.இந்தியாவை விட்டு ஃபோர்டு நிறுவனம் வெளியேறியபோது அதன் இந்திய சொத்துக்கள், தொழிற்சாலைகள் பலவற்றையும் விற்றபோதும், சென்னை மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையை மட்டும் இன்னமும் விற்கவில்லை. மறைமலைநகர் தொழிற்சாலை மட்டும் ஆண்டுக்கு 200,000 வாகனங்களையும், 3,40,000 இன்ஜின்களையும் தயாரிக்கும் திறன் கொண்டதாகும். எனவே ஃபோர்டு நிறுவனத்தின் இரண்டாவது அத்தியாயம் சென்னையிலிருந்தே தொடங்க இருக்கிறது.

இந்திய பின்புலத்தை சேர்ந்த குமார் கல்ஹோத்ரா என்பவர் ஃபோர்டு நிறுவனத்தின் சிஓஓ அதிகாரியாக பொறுப்பேற்றது முதலே, இந்திய மீள்வருகைக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வந்தன. இன்னமும் ஃபோர்டு நிறுவனம் அதிகாரபூர்வமாக தனது இந்திய மீள்வருகையை உறுதி செய்யாதபோதும், கார் உற்பத்தி சந்தை சார்ந்த செய்திகள் இதனை முரசறைந்து தெரிவிக்கின்றன.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக திடீரென நாட்டை விட்டு ஃபோர்டு நிறுவனம் வெளியேறியதில், இந்தியர்கள் மத்தியில் அதன் நம்பகத்தன்மை சற்றே அடிவாங்கியிருக்கிறது. எனவே அதனை சரி செய்யும் நோக்கில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளுடன் ஃபோர்டு இரண்டாம் முறையாக இந்தியாவில் நுழையும்.

அந்த வகையில் ஃபோர்டு தனது மீள்வருகையை அதிரடியாக தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிரபலமான எஸ்யூவி ரகங்களை இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறு வடிவமைப்பதில் ஏற்கனவே ஆய்வைத் தொடங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. டொயோட்டாவின் ஃபார்ச்சூனருக்கு போட்டியாக தனது பிரபல எண்டெவர் காரின் உற்பத்தியுடன், இந்திய மீள்வருகையை ஃபோர்டு நிறுவனம் அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *