மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி வருமா..? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொல்வதென்ன..!

அதிமுக நிறுவனரும், முன்னாள் தமிழக முதல்வருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் விழா அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை கொண்டாடப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் 107 கிலோ கேக்கை வெட்டி எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு வழங்கினார்.
பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஜெயக்குமார் பதிலளித்திருப்பதாவது,
”புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உலகளவில் போற்றக்கூடிய தலைவர். எனவே அப்படிப்பட்ட மாபெரும் தலைவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து சொல்வது என்பது நல்ல விஷயம் தான். அதிமுக – பாஜக கூட்டணிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கூட்டணியை பொறுத்தவரை பாஜகவோடு எப்போதும் கூட்டணி இல்லை என்பதை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தியுள்ளார்.
அதிமுக என்பது ஜாதி, மொழி, இனம் என அனைத்தையும் கடந்த இயக்கம். இறைவன் எங்கும் இருக்கிறான். யாரிடம் அன்பு, நன்றி, கருணை உள்ளதோ அவர்கள் மனித வடிவில் உள்ள தெய்வம். பேரறிஞர் அண்ணா வழியில் ’ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ தான் எங்களது வழி. நான் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு செல்லவில்லை.விருப்பப்படுபவர்கள் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு போகலாம் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார்.
வீரத்தின் சின்னம் ஜல்லிக்கட்டு. வரும் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி மலரும்”, இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.