வியூஸ்க்காக என்ன வேணாலும் செய்வீங்களா ? குளத்தில் தீ வைத்து டைவ் அடித்து ‘யூ டியூபர்’ ..!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வாலத்தூரைச் சேர்ந்தவர் ரஞ்சித் பாலா. யூ டியூப் மற்றும் இன்ஸ்டா பக்கங்களில் வீடியோ பதிவிட்டு லைக்குகளையும், ஷேர்களையும் குவித்து வரும் இவர், சில அதிர்ச்சியூட்டும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
சாத்தான்குளம் அடுத்த வைரவம்தருவை குளத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து அதற்குள் ரஞ்சித்பாலா டைவ் அடிப்பது போன்ற வீடியோவையும் பதிவிட்டுள்ளார். இந்த ரீல்ஸ் எடுப்பதற்காக நண்பர்களுடன் சென்று ஒரு கட்டிடத்தின் மீதேறி குளத்திற்குள் டைவ் அடிக்கிறார். அருகில் நிற்கும் நண்பர்கள், குளத்து நீரில் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
இதில் பெரிய அளவில் அவருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் இந்த வீடியோ பார்ப்பவர்கள் மனதை பதைபதைக்க செய்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவரது சமூக வலைதள பக்கங்களில் தேரிக்காட்டில் மண்ணுக்குள் தலைகீழாக புதைந்து நின்று சில மணி நேரம் கழித்து வெளியே வரும் வீடியோ என பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார். தேரிக்காட்டு மணல் சில நேரங்களில் வேகமாக சரிந்து விழும் தன்மை கொண்டது. இதுபோல் ஆபத்தான வீடியோக்களை பதிவிடுவதால் அதைப் பார்த்து மற்றவர்கள் செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ளும் நிலை ஏற்படும். ரீல்ஸ் செய்யும் வீடியோவாக இருந்தாலும், மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும். எனவே இவர்களைப் போன்ற யூ டியூபர்களை போலீசார் எச்சரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
ரஞ்சித் பாலா வீடியோ தொடர்பாக தட்டார்மடம் மற்றும் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.