கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்த எம்.ஜி.ஆர்… நஷ்டமடைந்த அசோகன் : காரணம் என்ன?
திரையுலகில் நெருங்கிய நண்பராக இருந்தாலும், எஸ்.ஏ.அசோகன் தயாரிப்பில் நடித்த நேற்று இன்று நாளை திரைப்படத்திற்கு கால்ஷீட் கொடுக்காமல் எம்.ஜி.ஆர் இழுத்தடித்ததாகவும் , அதனால் அசோகனுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது உண்மையா ?
இயக்குனர் பி.நீலகண்டன் இயக்கத்தில் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான படம் இன்று நேற்று நாளை. எம்.ஜி.ஆர், மஞ்சுளா, லதா, நம்பியார் அசோகன், உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அமல்ராஜ் பிலிம்ஸ் சார்பில் எஸ்.ஏ.அசோகன் தயாரித்திருந்தார்.
1972-ம் ஆண்டு இதய வீனை படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போது எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட நிலையில், அடுத்த சில தினங்களில், நிரந்தரமாக திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அடுத்து என்ன செய்வது என்று யோசித்த எம்.ஜி.ஆர், ஒப்புக்கொண்ட படங்களையும் முடிக்க வேண்டும், அரசியலிலும் தனிகட்சி தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரு வேலைகளிலும் ஒரே நேரத்தில் ஈடுபட்டார்.
அதே சமயம் முழுவதுமாக 2 வேலைகளிலும் கவனம் செலுத்த முடியாத நிலையில், எம்.ஜி.ஆர் நேற்று இன்று நாளை படத்தை ஒப்புக்கொண்டுள்ளார். பொதுவாக தனது படத்தின் பாடல் காட்சிக்கு 10 டியூன் போட்டால் அதில் இருந்து தான் எம்.ஜி.ஆர் ஒரு டியூனை தேர்வு செய்வார். அப்படி இருக்கும் நிலையில், இந்த படத்திற்காக எம்.எஸ்.வி டியூன் போடுவதும், அதை தயாரிப்பாளர் அசோகன், எம்.ஜி.ஆருக்கு போட்டு காட்டுவதும், அவர் பிடிக்கவில்லை வேறு டியூன் போடுங்க என்று சொல்வதும் தொடர்ந்துள்ளது.
இப்படியே சென்றுகொண்டிருந்த நிலையில், ஒரு கட்டத்தில் எம்.எஸ்.வி இதற்கு மேல் என்னால் டியூன் போட முடியாது என்று சொல்ல, எம்.எஸ்.வியை நேரில் சந்தித்த எம்.ஜி.ஆர், விசு நீ போட்ட அனைத்து டியூன்களும் அருமை. ஆனால் நான் இப்போது இரட்டை குதிரையில் சவாரி செய்கிறேன். அதனால் அசோகன் படத்திற்கு என்னால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. எனக்கு என்ன செய்வது என்று தெரியாததால் தான் இப்படி வேறு டியூன் போடு என்று சொன்னேன் என்று தனது நிலையை விளக்கியுள்ளார்.
இதனிடையே இன்று நேற்று நாளை படத்திற்காக, அசோகன் தனது 2 வீடுகளை விற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அசோகன் மனஉளைச்சலில் இருப்பதை புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர், அவரை அழைத்து, என்னாச்சு, யாருக்கு எவ்வளவு தர வேண்டும் என்று கேட்க, அசோகன் ஒரு லிஸ்ட் கொடுத்துள்ளார். அதன்பிறகு, மொத்த பணத்தையும் கொடுத்த எம்.ஜி.ஆர் எல்லாருக்கும் கொடுத்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு எம்.ஜி.ஆர் இன்று நேற்று நாளை படத்தில் நடித்து முடித்த நிலையில், தனக்கு வர வேண்டிய சம்பள பாக்கியையும் வாங்கிக்கொள்ளாமல் விட்டுக்கொடுத்துள்ளார். 2 வருடங்கள் தயாரிப்பில் இருந்த படம், 1974-ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வசூலில் பெரிய லாபத்தையும் பெற்று கொடுத்தது. இந்த தகவலை ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது விளரி யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.