இந்த நாட்களில் பெண்கள், குழந்தைகள் தரிசனத்திற்கு வர வேண்டாம்..! – சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

சபரிமலையில் மகர ஜோதியை முன்னிட்டு ஜனவரி 10 முதல் ஸ்பாட் புக்கிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மகர ஜோதி நடைபெறும் ஜனவரி 14, 15 ஆம் தேதிகளில் கூட்டம் அதிகமாக காணப்படும் என்பதால் பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என்று தேவசம்போர்டு அறிவுறுத்தியுள்ளது.

மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 14ஆம் தேதி 50,000 பேருக்கும், 15ஆம் தேதி 40,000 பேருக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மகரவிளக்கு பூஜையை தொடர்ந்து நடைபெறும் மகர மாத பூஜைக்கு ( தை மாத பூஜை ) ஜனவரி 16 முதல் 20 வரையான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது

ஜனவரி 16ஆம் தேதி 50,000 பேர் மற்றும் 17 முதல் 20 வரை தரிசனத்திற்கு 60,000 பேர் முன்பதிவு செய்யலாம். இந்த நாட்களில் பம்பை, நிலக்கல், வண்டிப்பெரியார் ஆகிய மூன்று மையங்களில் மட்டுமே ஸ்பாட் புக்கிங் அனுமதிக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் அடைக்கப்பட்டு பல மணிநேரம் காத்திருக்கும் சூழலும் உருவாகியுள்ளது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 மாலை நடை திறக்கப்பட்ட நிலையில் ஜனவரி 9 வரை தினசரி 1 லட்சத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

சபரிமலையில் ஜனவரி 15ஆம் தேதி அதிகாலை மகர சங்கரம பூஜையும் மாலையில் மகர ஜோதி தரிசனமும் நடக்கின்றன.

இதனையொட்டி வரும் 13ஆம் தேதி பந்தளத்தில் இருந்து திருவாபரண பவனி புறப்படுகிறது. திருவாபரண பவனியானது வரும் 15ஆம் தேதியன்று சபரிமலை சன்னிதானத்திற்கு வந்து சேரும். சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயரும் காலமான அதிகாலை 2.40 மணிக்கு மகர சங்கிரம பூஜை நடைபெறும்.

மன்னர் குடும்பத்தில் இருந்து நெய் தேங்காய் கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடைபெறும். 15ஆம் தேதி திருவாபரண பெட்டி சரங்குத்தி வந்த உடன் தேவசம்போர்டு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு சன்னதிக்கு அழைத்து செல்லப்படுவார்கள். இதனையடுத்து ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெறும்.

அன்றைய தினம் மாலையில் சபரிமலையில் பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியையும் அந்த நேரத்தில் வானில் ஜொலிக்கும் மகர நட்சத்திரத்தையும் தரிசிக்க பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கூட்டம் சபரிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திரள்வது வழக்கம்.

மேலும் மகர ஜோதி நடைபெறும் ஜனவரி 14, 15 ஆம் தேதிகளில் கூட்டம் அதிகமாக காணப்படும் என்பதால் பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என்று தேவசம்போர்டு அறிவுறுத்தியுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *