மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. பெங்களூர் ஐடி ஊழியர்கள் கொண்டாட்டம்..?!!
வீட்டில் ஜாலியாக டிராயர், லுங்கி கட்டிக்கொண்டு வேலைப்பார்த்து வந்த ஐடி ஊழியர்களைக் கடந்த ஒரு வருடத்தில் வலுக்கட்டாயமாக அலுவலகத்திற்கு வரச்சொல்லி ஐடி நிறுவனங்கள் நிர்ப்பந்தம் செய்து வந்த நிலையில்.. தற்போது மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம் கொடுக்கத் துவங்கியுள்ளது. இதற்கு ஓரே காரணம் பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு.
இந்தியாவின் ஐடி தலைநகரான பெங்களூரில் வருடம் முழுக்க டிராபிக் பிரச்சனை இருந்தாலும், அவ்வப்போது வரும் பெரும் மழையால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டாலும் , மக்கள் இதற்குப் பழக்கிக்கொண்டனர். ஆனால் எப்போதும் இல்லாத வகையில் பெங்களூரில் தற்போது கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்தப் பிரச்சனை பெங்களூர் மொத்தமும் இருக்கிறதா என்றால் இல்லை. பெங்களூரில் ஆர்ஆர் நகரில் உள்ள 5 வார்டுகள், பொம்மனஹள்ளி பகுதியில் 10 வார்கள், மகாதேவபுரா பகுதியில் 12 வார்டுகள், தாசரஹள்ளி பகுதியில் 3 வார்டுகள், எலஹங்கா பகுதியில் 5 வார்டுகள் என 35 வார்டுகளில் 110 கிராமங்களில் இந்தத் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
தண்ணீர் தட்டுப்பாடு எந்த அளவுக்கு இருக்கிறது என்றால் இப்பகுதியில் இருக்கும் மக்கள் சாப்பிட்ட தட்டுகளைக் கழுவக்கூடத் தண்ணீர் இல்லாத காரணத்தால் பேப்பர் பிளேட்டில் சாப்பிடுகின்றனர். சாப்பிட்ட பின்பு கைகழுவ முடியாத காரணத்தால் வெட் டிஸ்யூ வைத்து கைகளைத் துடைத்துக்கொண்டு வகுகின்றனர்.
தண்ணீப் பிரச்சனையால் பாத்ரூம் செல்ல கூட முடியாத காரணத்தால் மக்கள், அருகில் உள்ள மால்களுக்குச் சென்று தங்களுடைய காலை கடன்களை முடிக்கும் நிலை நிலவுகிறது. இப்படியிருக்கும் வேளையில் பெங்களூரை சுற்றியுள்ள ஐடி நிறுவனங்கள், ஐடி பார்க்குகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.
உதாரணமாக 5,000 ஊழியர்கள் கொண்ட ஒரு ஐடி பார்க்கில் தினமும் சுமார் 1 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இந்தத் தண்ணீரை கொண்டு வர இதுவரையில் எவ்விதமான பிரச்சனையும் இல்ல, ஆனால் பெங்களூர் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் காரணத்தால் தண்ணீரும் கிடைப்பதில்லை, தண்ணீர் டேங்கர்களும் கிடைப்பது இல்லை.
இத்தகைய ஐடி பார்க்குகளுக்குத் தினமும் இயங்க வேண்டுமெனில் சர்வசாதாரணமாக 10-12 டேங்கர்கள் தண்ணீர் தேவை. ஏற்கனவே தண்ணீர் டேங்கர்களின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் நிறுவனங்களாலும் இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க முடியவில்லை. இதனால் பெங்களூரில் பல நிறுவனங்கள் தற்போது ஐடி ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் கொடுக்கத் துவங்கியுள்ளது.