இளைஞர்களை தாக்கும் பணி சுமை, மன அழுத்தம்.. மும்பையில் 25 வயது ஐஐடி, ஐஐஎம் பட்டதாரி தற்கொலை..!

இந்தியாவில் தற்போது இளம் தலைமுறையினர் அதிகப்படியான மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர், கடந்த 2 வருடத்தில் பல ஸ்டார்ட்அப் நிறுவன தலைவர்கள்இளம் வயதிலேயே மரணம் அடைந்துள்ளனர், பல தலைவர்கள் இளம் வயதிலேயே முக்கிய உடல்நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இளம் தலைமுறையினர் மன அழுத்தம், வேலை பளு போன்ற காரணங்களால் பாதிக்கப்படுவது சமீபத்திய காலத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுக்குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டாலும், சமீபத்தில் மும்பையில் ஒரு இளைஞனின் தற்கொலை மீண்டும் இந்த விவாதத்தை பெரிதாக்கியுள்ளது.

வேலைப்பளுவால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக ஒரு இளைஞர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் பணி சார்ந்த அழுத்தங்களை கையாள நம் இளைஞர்களுக்கு கற்றுத்தர வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

மும்பையின் மட்டுங்கா பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் சவுரப்குமார் லட்டா. ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் படிப்பை முடித்தவர் இவர். தனியார் மல்டிநேஷனல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 23ஆம் தேதி இரவு திடீரென தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சவுரப்குமார் லட்டா ஒரு புராஜெக்டுக்காக அண்மையில் ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கே பணிகளை முடித்து விட்டு பிப்ரவரி 23ஆம் தேதி இரவு 10.30 மணி அளவில் வீடு திரும்பினார். படாலா உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசிந்து வந்த அவர், வீடு திரும்பிய சில மணி நேரங்களில், ஒன்பதாவது தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஐதராபாத்தில் இருந்து திரும்பிய அவர் திடீரென அன்று இரவே வீட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவருடன் பணியாற்றியவர்கள், பெற்றோர் என அனைவரிடமும் தகவல்களை சேகரித்து வருகின்றனர். குறிப்பாக பணியிடத்தில் அவரது மூத்த அதிகாரிகள் மற்றும் அந்த குறிப்பிட்ட புராஜெக்டில் வேலை செய்து கொண்டிருந்தவர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போன் தகவல்களையும் ஆய்வு செய்தனர்.

இதில் அவர் கடுமையான பணி அழுத்தம் இருப்பதாக நண்பர்கள் மற்றும் காதலியிடம் பகிர்ந்து கொண்டது தெரிய வந்தது. இந்த தகவலை வெளியிட்டுள்ள காவல்துறையினர், எந்த வகையான பணி அழுத்தம் என்பது குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவின் பெரிய கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்று , பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சென்ற இளைஞர் பணி அழுத்தம் தாங்காமல் உயிரை மாய்த்து கொண்டது பல விவாதங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக பணி சார்ந்த அழுத்தங்களை எதிர்கொள்வது குறித்து இளைஞர்களுக்கு எடுத்துரைக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *