குழந்தையின் உடைக்குள் ஒளிந்திருந்த உலகிலேயே கொடிய விஷத்தன்மை வாய்ந்த பாம்பு.! பதறவைக்கும் காட்சிகள்

கங்காருக்களின் நாடான ஆஸ்திரேலியாவில் பல ஆச்சர்யமான நிலப்பரப்புகள் உள்ளது. இதன் காரணமாக இங்கு பாம்புகளும் அதிகம். பாம்புகள் என்றால் கேட்கவா வேண்டும், மறைந்து தாக்குதல் நடத்துவதில் மிகுந்த திறமை கொண்டது அல்லவா. பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் தங்கள் வீட்டின் பின்புறத்தில் பாம்புகளை எதிர்கொள்வது வாடிக்கையாக போய்விட்டது. ஆனால் சில சமயங்கள் நமது இதயத்துடிப்பே நின்றுவிடும் அளவிற்கு பயமுறுத்தும் சம்வங்களும் நடைபெறும். சமீபத்தில் கூட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தாயார் ஒருவர் தனது குழந்தையின் உடைகள் வைக்கும் மேஜை அலமாரியின் உள்ளே பாம்பு ஒன்று இருந்துள்ளதைப் பார்த்துள்ளார்.

அதுவும் சாதாரண பாம்பு அல்ல; உலகிலேயே மிகவும் விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளில் இதற்கு இரண்டாவது இடமாம். இவ்வுளவு கொடிய விஷப்பாம்பு மூன்று வயது குழந்தையின் உடைக்குள்ளே மறைந்து இருந்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாம்பு பிடி வீரரான மார்க் பெல்லே உடனடியாக அழைக்கப்பட, குழந்தையின் படுக்கையறைலிருந்து 5 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தார். தனது பாம்பு மீட்கும் வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார் பெல்லே. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் கதிகலங்கி போயுள்ளனர்.

தனது குழந்தையின் ஆடையை எடுப்பதற்காக மேஜையை திறந்த போது, அங்கு பழுப்பு நிற பாம்பு இருந்ததை பார்த்துள்ளார். எப்படி பாம்பு துணிக்குள் வந்தது என்பதை பிறகுதான் நாங்கள் கண்டுபிடித்தோம். முந்தைய நாள் சலவை செய்த துணியை மடித்து எடுத்து வரும் போது அதற்குள் பாம்பு நுழைந்துள்ளது என தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார் பெல்லே.

இப்போது எல்லாருக்கும் எழும் ஒரே கேள்வி, எப்படி இவ்வுளவு பெரிய பாம்பு துணிக்குள் போகும் வரை தாய்க்கு தெரியாமல் இருந்தது? இந்த பாம்பு கொடிய விஷத்தன்மை உள்ளதோடு எடை குறைவாகவும் இருக்கும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இதன் எடையை நம்மால் உணரவே முடியாது. அந்தளவிற்கு மெல்லியதாக இருக்கும். சிலர் தங்கள் ஹேண்ட்பேக் அல்லது ஷாப்பிங் பேக்குகளில் கூட இந்த பாம்பு இருப்பதை தெரியாமல் இருந்துள்ளனர். இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என இதிலுள்ள சந்தேகத்தை தெளிவுபடுத்தியுள்ளார் பெல்லே.

ஒருபக்கம் இந்த சம்பவம் சோஷியல் மீடியா யூஸர்களை ஆச்சர்யப்படுத்தினாலும், இவ்வுளவு ஆபத்துக்கு இடையே தான் ஆஸ்திரேலியர்கள் வாழ்ந்து வருவதை நம்மால் உணர முடிகிறது. உலகிலேயே இரண்டாவது கொடிய விஷத்தன்மை வாய்ந்த இந்த ஈஸ்டர்ன் பழுப்பு நிற பாம்பு கடித்தால், கடிபட்டவரின் நரம்புகள் தான் முதலில் பாதிக்கப்படும். இதனால் உடனடியாக இதயம், நுரையீரல் செயலிழந்து மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் பரவலாக இந்த பாம்புகளை பார்க்கலாம் என்றும் வயல்வெளிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகளவு எலிகள் இருப்பதால், அங்கு அதிகமாக காணப்படுகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒருவேளை நீங்களும் ஆஸ்திரேலியாவில் புறநகர்ப் பகுதிகளுக்கு சென்றால் இந்த பாம்புகளை சந்திக்க நேரிடலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *