துன்பமில்லா வாழ்வுக்கு அஷ்டமியில் பைரவர் வழிபாடு… !
பொதுவாக அஷ்டமி திதி பைரவரை வழிபட உகந்த தினம். அஷ்டமி தினத்தில் பைரவ வழிபாடு செய்திட வாழ்வின் பொருளாதார நிலை உயரும் என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு.தேய்பிறை அஷ்டமி தினத்தில் சிவபெருமானின் வடிவமான பைரவரை வழிபட வேண்டும்.
அதிலும் இன்று தைமாத அஷ்டமியில் சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டிற்குரிய ஒரு சிறந்த தினமாக அமைந்துள்ளது. இந்த அஷ்டமி வியாழக்கிழமை வருவது கூடுதல் சிறப்பு…
இன்றைய நாளில் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்து வீட்டில் விளக்கேற்றி பைரவரை நினைத்து வழிபாடு நடத்த வேண்டும். சிவபெருமானுக்குரிய ஸ்லோகங்களை சொல்லலாம். அதே நேரம் இன்று மாலையில் சிவன் கோவிலில் உள்ள காலபைரவர் சந்நிதியில் செவ்வரளி மாலை சாற்றி, சர்க்கரை பொங்கல், கேசரி இவற்றில் ஏதாவது ஒன்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும்.ஐந்து வகையான எண்ணெய்களை ஊற்றி ஐந்து வகையான தீபங்கள் ஏற்றி சொர்ணாகர்ஷண பைரவருக்குரிய மந்திரங்கள் மற்றும் பைரவர் காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 எண்ணிக்கையில் துதிக்கலாம்.
இந்த முறையில் தை மாத அஷ்டமி தினத்தில் சொர்ணாகர்ஷண பைரவரை வழிபடுபவர்களுக்கு வறுமை மற்றும் பகைவர்களின் தொல்லை நீங்குவதுடன் வியாபாரத்தில் முன்னேற்றம், தன லாபம், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஆன்மிக அன்பர்களின் நம்பிக்கை.இன்று தேய்பிறை அஷ்டமி. தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அஷ்டமியில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நாளில் அம்மையும், அப்பனும் பக்தர்களுக்கு நேரடியாக காட்சி அளிப்பதாக ஐதீகம். இன்றைய நாளில் அன்னதானம் செய்தால் புண்ணியம் பெருகும் . பொருளாதார நிலையும் உயரும்.இதன் அடிப்படையில் இன்றைய தினம் அஷ்டமி சப்பரத்தில் எழுந்தருளிய இறைவனை வழிபாடு செய்து வருகின்றனர்.