ரூ.14 கோடி வொர்த்து.. நம்பர் 4ல் தரமான சம்பவம் .. 27 பந்தில் 61 ரன்கள் விளாசிய சிஎஸ்கே வீரர் மிட்சல்
சிஎஸ்கே அணியால் ரூ.14 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட டேரல் மிட்சல் 27 பந்துகளில் 61 ரன்களை விளாசி அசத்தியுள்ளார்.
அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி தரப்பில் ரூ.14 கோடி கொடுத்து நியூசிலாந்து அணியில் டேரல் மிட்சல் வாங்கப்பட்டார். உலகக்கோப்பை தொடரில் மிரட்டலாக ஆடிய டேரல் மிட்சல், வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்துவீச்சாளர்களை வெளுத்து கட்டினார். இதனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் இவரை வாங்குவதில் மும்முரமாக இருந்தது.
இதே திறமையுடன் இருந்த அம்பாதி ராயுடு கடந்த ஐபிஎல் சீசனுடன் ஓய்வை அறிவித்தார். இதனால் அம்பாதி ராயுடுவுக்கு மாற்றாக டேரல் மிட்சல் பெரும் தொகை கொடுத்து வாங்கப்பட்டார். இவரை வாங்கியது தொடர்பாக பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேசுகையில், டேரல் மிட்சலை வாங்குவது தான் எங்களின் திட்டமாக இருந்தது. அவருடன் ரச்சின் ரவீந்திராவை வாங்கியது போனஸ் என்று தெரிவித்தார்.
பென் ஸ்டோக்ஸ் மற்றும் அம்பாதி ராயுடு இருவருக்கும் சேர்த்து ஒரே வீரரை சிஎஸ்கே அணி வாங்கியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இதனிடையே வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் டேரல் மிட்சல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்பின்னர்களை வெளுப்பதற்காக இவரை சிஎஸ்கே அணி வாங்கிய நிலையில், வங்கதேச ஸ்பின்னர்களிடமே விக்கெட்டை பறி கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய டேரல் மிட்சல், அதிரடியாக 4 சிக்ஸ், 4 பவுண்டரிகளை விளாசி 22 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
சிறப்பாக ஆடிய அவர் 27 பந்துகளில் 61 ரன்களை விளாசி ஆட்டமிழந்து வெளியேறினார். ஆமிர் ஜமால், ஹாரிஸ் ராஃப், அப்பாஸ் என்று எந்த பவுலராக இருந்தாலும் வெளுத்து கட்டினார். இவரின் அதிரடியான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்களை குவித்தது. இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் டேரல் மிட்சலை பாராட்டி வருகின்றனர்.