இதற்காக வேலையை விட்டு அனுப்புவீர்களா ? நர்சுக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!

இந்திய ராணுவத்தில் நர்சாக பணியாற்றி வந்த செலீனா ஜான் என்பவர், திருமணம் செய்துகொண்ட காரணத்தால் கடந்த 1988-ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். அந்த சமயத்தில் அவர் லெப்டினண்ட் பதவியை வகித்து வந்தார். இந்த நிலையில் தனது பணிநீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி கடந்த 2012-ம் ஆண்டு ஆயுதப்படை தீர்ப்பாயத்தை செலீனா ஜான் அணுகியுள்ளார். அவரது மனுவை விசாரித்த தீர்ப்பாயம், செலீனா ஜானை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தரப்பில் 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 14-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, திருமணம் காரணமாக ராணுவ நர்சிங் சேவையில் இருந்து ஒருவரை பணிநீக்கம் செய்யலாம் என 1977-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, 1995-ம் ஆண்டில் வாபஸ் பெறப்பட்டு விட்டதாக கோர்ட் தெரிவித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமணத்தின் அடிப்படையில் ஒரு பெண்ணை பணிநீக்கம் செய்வது பாலின பாகுபாட்டின் மோசமான நிலை என்றும், பாலின சார்பு அடிப்படையில் எந்த ஒரு சட்டமும் அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்கப்படாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அத்தகைய ஆணாதிக்க சட்டங்களை ஏற்றுக்கொள்வது மனித கண்ணியம், சமத்துவம் மற்றும் நியாயமான முறையில் நடத்தப்படுவதற்கான உரிமையை குறைத்து விடுவதாக தெரிவித்த நீதிபதிகள், மனுதாரர் செலீனா ஜானுக்கு மத்திய அரசு 8 வார காலத்திற்குள் ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.