வாவ்..! இனி புதுச்சேரி சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்க்க வெறும் ரூ.150 இருந்தால் போதும்!
புதுச்சேரியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு மகிழும் வகையில் கடந்த ஆண்டுகளில் புதுவை சிட்டி டூர் இயக்கப்பட்டது. ஆனால் கொரோனாவுக்கு பிறகு இந்த சேவை அப்படியே கிடப்பில் போடப்பட்டதால் புதுவை சிட்டி டூர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.இப்போது புதுச்சேரியில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த மினி சுற்றுலா பேருந்துகள் பழுது நீக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது ஐந்து சுற்றுலா பஸ்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
புதுச்சேரியில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் இணைக்கும் வகையில் குறைந்தப்பட்ச கட்டணமாக நபருக்கு நாள் ஒன்றுக்கு (12 மணி நேரம்) ரூ.150 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் புதுச்சேரியின் 21 சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்க முடியும். இந்த பஸ்கள் காலை முதல் மாலை வரை தொடர்ந்து சுற்றுலா தலங்களில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த பேருந்துகள் 21 சுற்றுலாத் தலங்களுக்கு நம்மை அழைத்து செல்கின்றன.
தாவரவியல் பூங்கா, தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா, பாண்டி மெரினா பீச், அரவிந்தர் ஆசிரமம், அரவிந்தர் கையால் காகிதம் தயாரிக்கும் ஆலை, கைவினை கிராமம், அரிக்கன்மேடு, சின்ன வீராம்பட்டினம், ஆயி மண்டபம், சுண்ணாம்பாறு போட் ஹவுஸ், சிங்கிரி நரசிம்மர் கோயில், திருக்காஞ்சி, வில்லியனூர் திருக்காமீசுவரர் கோயில், வில்லியனூர் தேவாலயம், ஊசுடு ஏரி, பாண்லே தலைமையகம், ஆரோவில் பீச், ஆரோவில் மாத்ரிமந்திர், காமராஜர் மணி மண்டபம், அப்துல் கலாம் அறிவியல் மையம் போன்ற இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்க்கலாம்.