WPL 2024 : டெல்லியை தட்டி தூக்கிய உ.பி… ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 2 ஆவது சீசன் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் சுற்றில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் உ.பி.வாரியர்ஸ் அணி பலப்பரீட்சை மேற்கொண்டன. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த உ.பி. வாரியர்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது.
139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி, அதிரடியாக ஆட்டத்தை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீராங்கனையான மெக் லானிங் 60 ரன்கள் எடுத்து சிறப்பான அடித்தளத்தை அமைத்தார்.
சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி அணிக்கு, கடைசி ஓவரில், 3 விக்கெட் இருப்புடன் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. கடைசி ஓவரில் முதல் பந்து சிக்ஸருக்கு பறந்த நிலையில், டெல்லி அணியே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், திடீர் திருப்பமாக, கிரீஸ் ஹாரிஸின் அபார பந்து வீச்சால், டெல்லி அணி அடுத்தடுத்து 2 விக்கெட்களை பறிகொடுத்தது. இறுதியில் உ.பி.வாரியர்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. உ.பி. வாரியர்ஸ் அணி சார்பில் 59 ரன்கள் எடுத்து, 4 விக்கெட்களை கைப்பற்றிய இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.