WPL – எப்படி வென்றோம் என நம்ப முடியவில்லை..20 ரன்கள் குறைவாக அடித்தும் வெற்றி.. RCB கேப்டன் ஸ்மிருதி
மகளிர் பிரீமியர் லீக் தொடர் நடப்பு சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டர் போட்டியில் அதிர்ச்சி தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறுகிறது. ஆர் சி பி அணி நிர்ணயித்த 136 என்ற இலக்கை எட்ட முடியாமல் மும்பை அணி தோல்வியை தழுவி இருக்கிறது.
கடைசி மூன்று ஓவர்களில் 20 ரன்கள் தான் எடுக்க வேண்டும் என எளிதான நிலையில் இருந்த போது, அடுத்தடுத்து முக்கிய கட்டத்தில் மூன்று விக்கெட்டுகளை மும்பை அணி இழந்தது தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இந்த நிலையில் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர் சி பி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தானா இந்த போட்டியில் வென்றதை நம்பவே முடியவில்லை என்று கூறி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் இது ஒரு சிறந்த ஆட்டமாக அமைந்தது. என்னால் இன்னும் நாங்கள் வென்று விட்டோம் என்பதை நம்பவே முடியவில்லை. ஏனென்றால் நாங்கள் பேட்டிங்கில் 20 ரன்கள் குறைவாக அடித்து இருந்தோம்.
ஆனால் எங்களுடைய வீராங்கனைகள் சிறப்பாக பந்து வீசி களத்தில் நன்றாக பில்டிங் செய்து எங்களுக்கு வெற்றியை தேடி கொடுத்து இருக்கிறார்கள். 13 ரன்கள் தான் எடுத்திருந்தோம். இந்த இலக்கு உங்களுக்கு போதுமானதாக இருக்குமா? இல்லை நீங்கள் ஆக்ரோஷமாக செயல்படணுமா? தற்காப்பு செய்ய வேண்டுமா என்று குழப்பத்தை கொடுக்க கூடிய இலக்காகும்.
இதனால் குறைவான இலக்கை எடுத்தால் வெற்றி பெறவும் சிறிது வாய்ப்பு இருக்கும். கடைசி ஓவரை ஆஷா சிறப்பாக பந்து வீசினார். ஹர்மன்பிரீத் கவுர் விக்கெட் தான் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி விட்டது என்று நினைக்கிறேன். 19-வது ஓவரை சோபியும் அபாரமாக வீசினார். அதுதான் இந்த ஆட்டத்தில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியது.
பெர்ரீ குறித்து நான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவர் ஒரு ஜாம்பவான். நாங்கள் பேட்டிங்கில் மூன்று விக்கெட்டுகளை இழந்தும் கூட அவர் அதிரடியாக விளையாடி எங்கள் அணியை காப்பாற்றினார். கடைசி ஆட்டத்திற்கு பிறகு இந்த ஆட்டத்திற்கு நாங்கள் சிறப்பான முறையில் தயாராகினோம். டாஸ் வீசும்போது கூட நான் நல்ல மனநிலையில் இருந்தேன். ஆனால் 20 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த போது நான் ஏமாற்றம் அடைந்தேன்.
கிரிக்கெட் என்பது ஒரு ஜாலியான விளையாட்டு. நீங்கள் வெற்றி பெறுவீர்களா ?தோல்வி அடைவீர்களா ?என்று உங்களால் நிர்ணயிக்கவே முடியாது. இறுதிப் போட்டிக்கு இன்னும் ஒரு நாள் இருக்கிறது. அந்த நாளை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக பயிற்சி செய்து ஞாயிற்றுக்கிழமை நாங்கள் நல்ல மனநிலையில் வருவோம் என்று ஸ்மிருதி மந்தானா கூறியுள்ளார்.