இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் சஸ்பெண்ட்: மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தகவல்; காரணம் என்ன?
இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கான தேர்தல் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. அதில், மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கின் ஆதரவாளரான சஞ்சய் சிங் உள்ளிட்டவர்கள் வெற்றி பெற்றனர்.
சம்மேளனத்தின் புதிய தலைவராகத் தேர்வான சஞ்சய் சிங் அதே தினத்தில்,’இந்த ஆண்டு இறுதிக்குள் U-15 மற்றும் U-20 பிரிவினருக்கான தேசிய போட்டிகள் உத்தரப் பிரதேசத்தின் நந்தினி நகரில் நடைபெறும்” என அதிரடியாக அறிவித்தார்.
தேசியப் போட்டிகளில் பங்கேற்கும் மல்யுத்த வீரர்களுக்கு போதுமான காலமோ, உரிய அறிவிப்போ கொடுக்காமல் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு விதிமுறைகளுக்கு முரணானது என விளையாட்டு அமைச்சகத்தால் கூறப்பட்டது. இதற்கிடையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஏராளமான மல்யுத்த வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குப் பதக்கம் வென்றுதந்த சாக்ஷி மாலிக் மல்யுத்தத்திலிருந்தே விலகுவதாக கண்ணீர் மல்க அறிவித்தார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மற்றொரு மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியாவும், ஓலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங் யாதவும் தங்களுக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதைத் திருப்பியளிப்பதாகத் தெரிவித்தனர். இந்த நிலையில்தான், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம்,“புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் மல்யுத்த வீரர்களுக்கான முறையான அறிவிப்புகளைக் கூட வழங்காமல் 15 வயதுக்குப்பட்டோர் மற்றும் 20 வயதுக்குப்பட்டோருக்கான போட்டிகளை ஏற்பாடு செய்வதாக வெளியிட்ட அவசர அறிவிப்பைத் தொடர்ந்து இந்த இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருக்கிறது.