ஹீரோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள Xoom 160 ஸ்கூட்டர்… சிறப்பம்சங்கள் என்ன?
ஒருபக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கியர் இல்லாத இண்டர்னல் கம்பஸ்டன் இஞ்சினில் இயங்கும் ஸ்கூட்டர்களும் அதிகமாக அறிமுகமாகி வருகிறது. அதுவும் இப்போது வரக்கூடிய ஸ்கூட்டர்கள் பைக்குகளுக்கே போட்டியளிக்கும் விதமாக அதிக சிசி திறனில் வருகிறது.
இந்நிலையில் இந்தியாவின் முன்னனி இரு சக்கர வாகன உற்பத்தியாளராக இருக்கும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம், சமீபத்தில் Xoom 160 என்ற புதிய ஸ்கூட்டரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச மோட்டார் ஷோவான EICMA-ல் இந்தப் பைக்கை காட்சிப்படுத்தியிருந்தது ஹீரோ நிறுவனம். பின்னர் ஹீரோ வேர்ல்டு 2024 நிகழ்ச்சியில் Xoom 160 அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் இந்த ஸ்கூட்டர் மார்ச் மாதமே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல சிறப்பம்சங்களும் வசதிகளும் கொண்ட புதிய Xoom 160 பைக்கை வாங்க நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு காசுக்கும் ஏற்ற பயன் உங்களுக்கு கிடைக்கிறது. முறையான புரொஜெக்டர் ஹெட்லைட் செட்டப், LED DRL லைட்டிங், ஒவ்வொரு வளைவிலும் கூர்மையான முனைகள் என பார்ப்பதற்கே இதன் வடிவமைப்பு அட்டகாசமாக இருக்கிறது.
ஹீரோ Xoom 160 சிறப்பம்சங்கள்:
இந்தப் பிரிவில் வரக்கூடிய மற்ற ஸ்கூட்டர்களை விட ஸ்மார்ட்டாகவும் தனித்தும் தெரியும் வகையில் ஸ்மார்ட் கீ வசதியை கொடுத்துள்ளார்கள். இதன் மூலம் பைக் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகியவற்றை கட்டுப்படுத்துவது மற்றும் இருக்கைகளை திறப்பது போன்ற வசதிகளை பெற முடியும்.
பைக்கின் ஓரத்தைப் பொறுத்தவரை கால் வைப்பதற்கு போதுமான இட வசதி உள்ளது. இதனால் பைக்கை எந்த சிரமமும் இல்லாமல் ஓட்ட முடிகிறது. பார்ப்பதற்கு ஆக்ரோஷமான தோற்றத்தை அளித்தாலும் சிங்கிள் சீட் வசதி இருப்பதால் பைக்கில் செல்வதற்கு எந்த தொந்தரவும் இல்லாமல் நன்றாகவே இருக்கிறது. பைக்கின் கீழ் ஓரத்தில் உள்ள பேனலில் Xoom பேட்ஜ் பொறுத்தப்பட்டுள்ளது. இது பைக்கின் அழகை மேலும் அதிகப்படுத்துகிறது.
சஸ்பென்சன் செட்டப்:
ஹீரோ Xoom ஸ்கூட்டரின் சஸ்பென்சனைப் பொறுத்தவரை முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க், பின்பக்கம் டூயல் ஷாக் அப்சர்பர் உள்ளது. 14 இன்ச் அலாய் வீல். அதற்கேற்ற அனைத்து வகைக்கும் பயன்படும் டயர்கள், டிஸ்க் பிரேக் செட்டப் ஆகியவையும் உள்ளது.
இஞ்சின் பவர்:
ஹீரோ Xoom ஸ்கூட்டர் 156சிசி பவருள்ள லிக்கியூட் கூல்ட் சிங்கிள் சிலிண்டர் இஞ்சினைக் கொண்டுள்ளது. இது அதிகப்பட்சமாக 8,000 rpm-ல் 13.8 BHP பவரையும் 6,500 rpm-ல் 13.7 Nm இழுவிசையும் பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.1.45 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.