Yash Birthday: நல்ல நாள்ல போய் இப்படியா நடக்கணும்.. பிறந்தநாளில் யாஷின் ரசிகர்கள் 3 பேர் பலி! – என்னாச்சு?

கே.ஜி.எஃப் திரைப்படம் மூலமாக உலகம் முழுக்க சென்று சேர்ந்தவர் நடிகர் யாஷ். இவர் தன்னுடைய 38 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

 

இவரது பிறந்தநாளை முன்னிட்டு, கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் அவரது ரசிகர்கள் சிலர் மின்கம்பத்தில் ஏறி யாஷின் பேனரை கட்ட முயன்றதாக தெரிகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்க, 3 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் 25 அடி உயர கட் அவுட் வைத்த போது மின்சாரம் தாக்கியதில் ஹனுமந்த, முரளிநடவினமணி, நவீர் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் 4 பேர் படுகாயமும் அடைந்திருக்கின்றனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

யார் இந்த யாஷ்?

2000ம் ஆண்டு வாக்கில் பல தொலைக்காட்சி தொடர்களில் தோன்றியதன் மூலம் யாஷ் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். 2007 ஆம் ஆண்டு ஜம்பதா ஹுடுகி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்ற மோகினா மனசு, யாஷுக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. முன்னணி பாத்திரத்தில் நடித்த அவரது முதல் படம், ராக்கி (2008), பெரிய அளவில் பேசப்படவில்லை. அவர் அதைத் தொடர்ந்து வணிக ரீதியாக வெற்றியடைந்த காதல் திரைப்படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

2012 இல் டிராமா படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தனது முதல் பிலிம்பேர் விருதைப் பெற்றார். கூக்லி (2013), ராஜா ஹுலி (2013), கஜகேசரி (2014), மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராமாச்சாரி (2014) ஆகியவற்றின் மூலம் கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் யாஷ்.

டிராமா படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ராதிகா பண்டிட்டை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.

கே.ஜி.எஃப் படம் இவரை முன்னணி நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது. இந்தப்படத்தின் வாயிலாக, கன்னட திரையுலகம் மட்டுமே அறிந்து வந்த யாஷை, அகில திரையுலகமும் திரும்பிப் பார்த்தது.

யாஷ் 8 ஜனவரி 1986 அன்று கர்நாடகாவின் ஹாசனில் உள்ள பூவனஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். அவருக்கு இரண்டு பெயர்கள் வைக்கப்பட்டன.

சட்டப்பூர்வமாக நவீன், மற்றும் அவரது தாயின் குடும்பத்தார் அவருக்கு யஷ்வந்த் என்று பெயரிட்டனர். யஷ்வந்த் பிறந்த நேரம் ஜோதிட ரீதியாக ய (யா) என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் தேவை என்று அவர்கள் நம்பியதால் அதை தேர்ந்தெடுத்தனர்.

அவரது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன், அவர் ஒரு வேறொரு பெயரை வைத்துக் கொள்ளுமாறு மற்றவர்களால் அறிவுறுத்தப்பட்டார். கர்நாடகாவில் ஒரு நடிகருக்கு என்று ஒரு தனிப்பெயருடன் தனித்து நிற்க ஆசைப்பட்டு, யஷ்வந்தை யாஷ் என்று சுருக்கினார்.

ராக்கிங் ஸ்டார் என்ற பட்டமும் இவருக்கு வைக்கப்பட்டுள்ளது. தற்போது டாக்சிக் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *