Year Ender 2023 : அஜித் முதல் தனுஷ் வரை… 2023ல் கவனிக்க வைத்த ஹீரோக்கள்..!

தமிழ் சினிமாவில் சில முன்னணி நடிகர்களுக்கு தற்போது நடைபெற்று வரும் 2023ஆம் ஆண்டு கம்பேக்கை கொடுத்துள்ளது. இந்த ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் நடப்பு ஆண்டில் கம்பேக் கொடுத்த ஹீரோக்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். நடிகர் அஜித்திற்கு கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான வலிமை திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்று தந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனர் எச். வினோத் இயக்கியிருந்தார்.
ஆக்சன் காட்சிகள் நிறைந்ததாக வலிமை படம் எடுக்கப்பட்டிருந்தாலும், அம்மா சென்டிமென்ட்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது, பலவீனமான திரைக்கதை உள்ளிட்டவைகளால் ரசிகர்களின் கவனத்தை இந்த படம் பெறவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு பொங்கலையொட்டி வெளிவந்த துணிவு திரைப்படம் அஜித்திற்கும் எச்.வினோத்திற்கும் கம்பேக்கை கொடுத்தது.
விஜய் நடித்த வாரிசு திரைப்படம், துணிவுடன் நேரடியாக மோதியது. பல ஆண்டுகளுக்கு பின்னர் அஜித் மற்றும் விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகின. இதனால் கோலிவுட்டே பெரும் பரபரப்புக்கு உள்ளானது. இருப்பினும் 2 படங்களும் ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியில் வெற்றி அடைந்தன.
துணிவு திரைப்படம் சுமார் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. கடந்த ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு டான் மற்றும் பிரின்ஸ் படங்கள் வெளிவந்தன. இதில் டான் திரைப்படம் ஓரளவு வெற்றியை பெற்றது. இருப்பினும் இந்த படத்தை விமர்சன ரீதியில் பலரும் சகட்டுமேனிக்கு கிண்டல் செய்திருந்தனர். தெலுங்கு பட இயக்குனர் இயக்கிய பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் பின்னடைவில் இருந்த சிவகார்த்திகேயன் இந்த ஆண்டு வெளியான மாவீரன் திரைப்படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்துள்ளார்.
நடிகர் விஷாலுக்கு எனிமி மற்றும் லத்தி படங்கள் கை கொடுக்கவில்லை. இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படத்தின் மூலமாக விஷால் மீண்டும் மார்க்கெட்டிற்கு வந்துள்ளார். இந்த படம் 100 கோடி ரூபாயை தாண்டி வசூலித்துள்ளது.
ஒரே மாதிரியாக பேய் படங்களில் மட்டுமே நடிப்பதாக ராகவா லாரன்ஸ் தொடர்ந்து விமர்சனங்களை எதிர்த்து கொண்டு வந்தார். அவர் சமீபத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் மூலமாக தனது நடிப்பு திறமையை நிரூபித்துள்ளார். ஜிகர்தண்டா திரைப்படம் வர்த்தகம் மற்றும் விமர்சன ரீதியில் வரவேற்பு பெற்றுள்ளது.
இதேபோன்று தனுசுக்கு முன்பு வெளிவந்த நானே வருவேன் திரைப்படம் வசூல் ரீதியில் தோல்வியடைந்தது. அதனை ஈடு செய்யும் வகையில் இந்த ஆண்டு வெளியான வாத்தி திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அவருக்கும் கம்பேக்கை கொடுத்துள்ளது. அந்த வகையில் பல முன்னணி ஹீரோக்கள் 2023 ஆம் ஆண்டில் மீண்டும் தங்களது மார்க்கெட்டை பிடித்துள்ளனர்.