வெறும் ரூ.84 வீடு வாங்கலாம்..அதுவும் அமெரிக்காவில்…ஆனா ஒரு கண்டிஷன்..!
எல்லோருக்கும் ஒரு வீடு வேண்டும் என்ற கனவு நிச்சயம் இருக்கும். மக்கள் தங்கள் வாழ்நாள் வருமானத்தை வீடு வாங்க முதலீடு செய்கிறார்கள். அல்லது வீடு வாங்க கடன் வாங்கி அதனை வாழ் நாள் முழுக்க அடைக்கிறார்கள். ஆனால் வெறும் 84 ரூபாய் விலையில் அமெரிக்காவில் வீடு கிடைக்கிறது என்றால் நம்ப முடிகிறதா…
அமெரிக்காவில் இருக்கும் பால்டிமோர் நகரத்தில் காலியாக இருக்கும் வீடுகளை வெறும் ஒரே டாலருக்கு விற்பதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இந்த அனுமதியை பால்டிமோர் நகர கவுன்சில் வழங்கியுள்ளது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு பால்டிமோர் நகரசபையின் மதிப்பீட்டு வாரியத்தின் கூட்டத்தில் இதற்கான வாக்கெடுப்பு நடந்தது. அதன்படி, காலியாக இருக்கும் வீடுகள் ஒரு டாலருக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் 84 ரூபாய்) விற்கும் முறை ஒப்புதல் பெற்றது.
அதன்படி, இந்த காலி வீடுகளை வாங்குவோர் அந்த வீட்டை தாங்களே புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என கண்டிஷனும் கூறப்பட்டுள்ளது. வீட்டை வாங்கி ஒரு வருடத்திற்குள் புதுப்பித்து, குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்காவது அங்கேயே இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த வீட்டை புதுபிக்க குறைந்தது 90 ஆயிரம் டாலர் செலவாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.