டாடா காரை இந்த ஒரு காரணத்துக்காகவே வாங்கலாம்!! மாருதி சிஎன்ஜி காரின் பவர் அவுட்-புட் என்ன?
பெட்ரோல், டீசல் எரிபொருள்களின் பயன்பாட்டை குறைத்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. இதற்கான வேலைகளில் கடந்த பல வருடங்களாகவே அரசாங்கம் ஈடுப்பட ஆரம்பித்துவிட்டது. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலக்ட்ரிக் வாகனங்கள் தான் முதன்மையான சாய்ஸாக உள்ளன.
இருப்பினும், இதற்கிடையில் மற்ற எரிபொருள் ஆப்ஷன்களையும் முயற்சி செய்து பார்த்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் கார் நிறுவனங்கள் உள்ளன. இதன் வெளிப்பாடாக, சமீப வருடங்களாக சிஎன்ஜி கார்கள் அதிக எண்ணிக்கையில் வெளிவர ஆரம்பித்துள்ளன. அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கக்கூடியவை சிஎன்ஜி கார்கள் ஆகும்.
சிஎன்ஜி கார்கள் உற்பத்தியில் ஆரம்பத்தில் மாருதி சுஸுகி மட்டுமே தீவிரமாக இருந்தது. ஆனால் தற்போது, டாடா மோட்டார்ஸும் அதன் புது, புது சிஎன்ஜி கார்களை ஒன்றன் பின் ஒன்றாக அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற 2024 பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போவில் டாடா நிறுவனம் சார்பில் நெக்ஸான் ஐ-சிஎன்ஜி கார் காட்சிப்படுத்தப்பட்டது.
டாடா நெக்ஸான் ஐ-சிஎன்ஜி காருக்கு விற்பனையில் மாருதி சுஸுகியின் பிரெஸ்ஸா சிஎன்ஜி கார் போட்டியாக இருக்கும். ஏனெனில், இவை இரண்டும் எஸ்யூவி ரக உடலமைப்பை கொண்ட கார்களாகும். ஆனால், நெக்ஸான் ஐ-சிஎன்ஜி காரில் பயன்படுத்தப்படுவது வித்தியாசமான சிஎன்ஜி தொழிற்நுட்பம் ஆகும். இந்த இரு எஸ்யூவி சிஎன்ஜி கார்களில் எது சிறந்தது? வாருங்கள் இந்த செய்தியில் பார்க்கலாம்.
மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி (Maruti Suzuki Brezza CNG): பிரெஸ்ஸா சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரை கடந்த 2022 ஜூன் மாதத்தில் மாருதி சுஸுகி விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அதன்பின், இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட் கடந்த 2023 மார்ச் மாதத்தில் விற்பனைக்கு கொண்டுவரப் பட்டது.
பிரெஸ்ஸா சிஎன்ஜி காரில் 1.5 லிட்டர் கே15சி நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் உடன் சிங்கிள்-சிலிண்டரில் சிஎன்ஜி கிட் தொழிற்சாலையிலேயே பொருத்தப்படுகிறது. 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும் பிரெஸ்ஸா சிஎன்ஜி காரில் அதிகப்பட்சமாக 87 பிஎச்பி மற்றும் 121 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றல் கிடைக்கிறது.
டாடா நெக்ஸான் ஐ-சிஎன்ஜி (Tata Nexon i-CNG): இந்த புதிய டாடா சிஎன்ஜி காரின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இது கட்டிங்-எட்ஜ் தொழிற்நுட்பத்துடன் டர்போ பெட்ரோல் என்ஜினை கொண்ட இந்தியாவின் முதல் சிஎன்ஜி கார் ஆகும். பிரெஸ்ஸா சிஎன்ஜி காரை போல் அல்லாமல், ட்வின்-சிலிண்டர் சிஎன்ஜி டெக்னாலஜியை நெக்ஸான் ஐ-சிஎன்ஜி கார் பெற்றுள்ளது.
இதன் விளைவாக, சுமார் 60 லிட்டர்கள் வரையிலான இயற்கை எரிவாயுவை இந்த காரின் சிலிண்டர்களில் நிரப்பிக் கொள்ள முடியும். அதேநேரம், பின்பக்க பூட் ஸ்பேஸ் பகுதியும் 230 லிட்டர்கள் கொள்ளளவில் நன்கு பெரியதாக கிடைக்கும். நெக்ஸான் சிஎன்ஜி காரில் கிடைக்கக்கூடிய இயக்க ஆற்றல் குறித்த எந்த விபரத்தையும் இன்னும் டாடா மோட்டார்ஸ் வெளியிடவில்லை.