பொங்கலுக்கு ஒரு ஓலா இ-ஸ்கூட்டரை கம்மி விலையில் வாங்கலாம்.. போட்டியாளர்களை முன்னேறவே விடாது போலிருக்கே இந்த ஓலா
புத்தாண்டு ஆஃபர்களைத் தொடர்ந்து பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளை முன்னிட்டு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மீண்டும் அதிரடி ஆஃபர்களை அறிவித்து இருக்கின்றது. என்ன ஆஃபரை இப்போது அறிவித்து இருக்கின்றது? இந்த ஆஃபர் எவ்வளவு நாட்கள் நிலுவையில் இருக்கும்? என்பதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகன விற்பனையில் முன்னணியில் இருக்கின்றது ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம். இதுவே இந்தியாவின் மின்சார இருசக்கர வாகன உலகின் மகுடம் சூடா மன்னனாகவும் விளங்கிக் கொண்டு இருக்கின்றது. இதனாலேயே இந்த பிராண்டைக் குறிவைத்து போட்டி நிறுவனங்கள் சில, தங்களின் தயாரிப்புகளையும், அதன் தயாரிப்புகளின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு சிறப்பு சலுகைகளையும் அறிவித்த வண்ணம் இருக்கின்றன.
அந்தவகையில், சமீபத்தில் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy) நிறுவனம், தன் வசம் இந்தியர்களை ஈர்க்கும் பொருட்டு அதன் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான ஏத்தர் 450எஸ் (Ather 450S)-இன் விலையில் பெரும் தொகையை குறைத்தது. ரூ. 20 ஆயிரம் வரையில் விலை குறைப்பை அது செய்தது.
இது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கும் பெரும் தலைவலியையும், நெருக்கடியையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இந்த நிலையிலேயே ஏத்தர் எனெர்ஜி-யின் இந்த நடவடிக்கைக்கு எதிர்வினை ஆற்றும் விதமாக பதிலுக்கு ஓலா எலெக்ட்ரிக்-கும் தற்போது சிறப்பு சலுகைகளை இந்தியாவில் அறிவித்து இருக்கின்றது. இந்த சிறப்பு சலுகையை ‘அறுவடை திருவிழா’ (Harvest Festival) எனும் பெயரில் அது அறிமுகம் செய்திருக்கின்றது.
15 ஆயிரம் ரூபாய்த்திற்கான பலனை இதன் வாயிலாக தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஓலா வழங்க இருக்கின்றது. ஆனால், இந்த சலுகை குறைந்த கால சலுகை என்பது குறிப்பிடத்தகுந்தது. வருகின்ற 15 ஆம் தேதி வரை மட்டுமே சிறப்பு சலுகை நடைமுறையில் இருக்கும் என ஓலா அறிவித்து இருக்கின்றது.
அறுவடை திருவிழா திட்டத்தின்கீழ் ஓலா நிறுவனம், ரூ. 6,999 மதிப்பிலான கூட்டப்பட்ட பேட்டரிக்கான வாரண்டி திட்டத்தையும், ரூ. 3 ஆயிரம் மதிப்பிலான எக்சேஞ்ஜ் போனஸையும் வழங்க இருக்கின்றது. இத்துடன், கவர்ச்சிகரமான நிதி திட்டங்களையும் அது அறிவித்து இருக்கின்றது. இந்த இரண்டு திட்டமும் எஸ்1 ப்ரோ மற்றும் எஸ்1ஏர் இரண்டிற்கும் பொருந்தும்.
இத்துடன், நிறுவனத்தின் மலிவு விலை மாடலான எஸ்1 எக்ஸ்-பிளஸ்க்கும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. அதாவது, வருகின்ற 15 ஆம் தேதி வரை இதன் சலுகை விலையான ரூ. 89,999 -க்கு வாங்கிக் கொள்ள முடியும் என்றே ஓலா அறிவித்து இருக்கின்றது.
இதுதவிர கிரெடிட் கார்டு பயன்பாட்டாளர்களுக்கும் அது சிறப்பு சலுகையை அறிவித்து இருக்கின்றது. அந்த குறிப்பிட்ட கிரெடிட் கார்டை பயன்படுத்தி இஎம்ஜை திட்டத்தில் வாங்குபவர்களுக்கு சிறப்பு கேஷ்பேக் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. 5 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி மற்றும் வட்டியில்லா இஎம்ஜ திட்டமே அவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது.
மேலும், அவர்களால் ஜீரோ டவுன்பேமென்டிலும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிக் கொள்ள முடியும். இப்போதைய நிலவரப்படி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஐந்து விதமான தயாரிப்புகளை இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. எஸ்1 ப்ரோ (இரண்டாம் தலைமுறை), எஸ்1 ஏர் மற்றும் எஸ்1 எக்ஸ் ஆகியவையே அவை ஆகும்.
இதில், எஸ்1 எக்ஸ் மட்டும் மூன்று விதமான தேர்வுகளில் அது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. எஸ்1 எக்ஸ்-பிளஸ் (S1 X+), எஸ்1 எக்ஸ் 3kWh (S1 X 3kWh) மற்றும் எஸ்1 எக்ஸ் 2kWh (S1 X 2kWh) ஆகியவையே அவை ஆகும்.