அற்புதமான சுவையில் ஆலு மட்டார் செய்யலாம் வாங்க!
ஆலு மட்டார் மிகவும் பிரபலமான வட இந்திய உணவாகும். இது உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்யப்படும்.
இதன் தனித்துவமான சுவைக்காகவே எல்லா வயதினரும் இதை விரும்பி உண்பார்கள். நீங்கள் இந்திய உணவுகளின் ரசிகராக இருந்தால் நிச்சயம் ஆலு மட்டாரை முயற்சிக்க வேண்டும். சரி வாருங்கள் வீட்டிலேயே இந்த அற்புத உணவை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள:
எண்ணெய் – தேவையான அளவு
சீரகம் – 1 ஸ்பூன்
வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
தக்காளி – 2
உருளைக்கிழங்கு – 2
பச்சை பட்டாணி – 1 கப்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
கொத்தமல்லித் தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா – ½ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
செய்முறை:
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அது சூடானதும் எண்ணெய் சேர்த்து கடுகு, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்னர் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, ஒரு நிமிடம் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்ததாக தக்காளியை மைய அரைத்துக் கூழாக்கி அதில் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை கெட்டியாக வதக்கவும்.
பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லித்தூள், உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்குங்கள். இந்த மசாலா கலவையில் துண்டாக்கப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணியை சேர்த்து கிளறி விடவும். இப்போது கடாயை மூடி குறைந்த வெப்பத்தில் சுமார் 15 நிமிடங்கள் வேக விடுங்கள். அடி பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறி விடவும்.
உருளைக்கிழங்கு வெந்ததும் கரம் மசாலா தூவி, கலந்து விட்டு மேலும் ஐந்து நிமிடம் சமைக்கவும்.
இறுதியில் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லியை தூவி கிளறி விட்டு இறக்கினால், சுவையான ஆலு மட்டார் தயார்.