உடல் எடையைக் குறைக்க உதவும் தாமரை விதைகள் வைத்து சுவையான கீர் செய்யலாம் வாங்க.!
இனிப்பு பண்டங்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதுவும் பாலில் செய்யப்படும் இனிப்பு வகைகளை பிடிக்காதவர்கள் யாவரும் இல்லை. ஆனால் ஒரு சிலர் இவற்றை சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து விடுமோ என்று பயப்படுவார்கள்.
ஆனால் உடல் எடையை குறைக்க உதவும் தாமரை விதைகள் எனும் மக்கானாவை வைத்து ஆரோக்கியம் நிறைந்த சுவையான கீர் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். வீட்டிலேயே மக்கானா கீர் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் காணலாம்…
தேவையான பொருட்கள்:
மக்கானா – 2 கப்
காய்ச்சிய பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 1/4 கப்
பொடியாக நறுக்கிய பாதாம் – 1 டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய முந்திரி 1 டேபிள் ஸ்பூன்
திராட்சை – 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் – ½ டீஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
அடுப்பில் ஒரு கடாய் வைத்து ஒரு டீஸ்பூன் நெய் விட்டு சூடாக்கி கொள்ளவும்.
நெய் சூடானதும் அதில் 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து நன்றாக வறுக்கவும்.
முந்திரி மற்றும் பாதாம் சிறிது பொன்னிறமானதும் 1 டேபிள் ஸ்பூன் திராட்சையை சேர்த்து திராட்சை குண்டாக வந்ததும் தீயை அணைக்கவும்.
அதன் பிறகு வாணலியை அடுப்பில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி 2 கப் மக்கானாவை சுமார் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
வறுத்து வைத்துள்ள மக்கானாவில் இதிலிருந்து ஒன்றரை கப் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
குறிப்பு : நீங்கள் அரைக்க விரும்பும் மக்கானாவின் அளவு உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது. நீங்கள் விரும்பினால் 1 கப் அல்லது அதற்கும் குறைவாகப் பயன்படுத்தலாம்.
அடுத்து கடாய் ஒன்றை வைத்து மீதமுள்ள அரை கப் வறுத்த மக்கானாவுடன் பாலை சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்
பிறகு அதனுடன் அரைத்து வைத்துள்ள மக்கானாவை சேர்த்து கொதிக்க விடவும்.
இவை சீரான பதத்திற்கு வந்தவுடன் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை மற்றும் பாதாம் பருப்பை சேர்த்து மேலும் சில நிமிடங்கள் குறைந்த தீயில் சமைக்கவும்.
பிறகு இதனுடன் சர்க்கரை மற்றும் பச்சை ஏலக்காய் சேர்த்து மேலும் 2-3 நிமிடங்கள் சமைத்து இறக்கவும்.
அவ்வளவுதான் சுவையான மக்கானா கீர் தயார்… இதை நீங்கள் மேலும் சில உலர் பழங்களால் அலங்கரித்து சூடாகவோ அல்லது குளிராகவோ பரிமாறவும்.