பஸ்ல இனி தொங்கிகிட்டு போக முடியாது – புது பிளானை கையில் எடுத்த மாநகர போக்குவரத்துக் கழகம்

திரைப்படங்களில் இடம்பிடிக்கும் காதல் காட்சிகள் மற்றும் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில், படியில் பயணிப்பதுதான் கெத்து என்று வெத்து சித்தரிப்புகள் இடம்பிடித்திருந்தன.

இதனை பள்ளி, கல்லூரி மாணவர்களில் ஒரு தரப்பினர் மனதில் ஆழமாக ஏற்றிக்கொண்டு தவறான புரிதலை கொண்டு ஆபத்தை உணராமல் படிக்கட்டுகளில் பயணம் செய்து வருகின்றனர். ஒரு சிலர் இந்த அபாயகரமான பயணங்களில் காயம்படுவதுடன், சில நேரங்களில் படிகட்டு பயணங்கள் செய்து, பள்ளி கல்லூரி மாணவர்கள், விலை மதிப்பற்ற உயிரை கூட விட்டுள்ளனர். இதனால் அந்த மாணவர்களின் குடும்பத்தினர் படும் அவதியும், மனவேதனையும் வார்த்தைகளில் அடங்காதவை.

இந்த நிலையில் பேருந்து பயணத்தை பாதுகாப்பானதாக மாற்ற சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் புதிய முயற்சி கொண்டுவரப்படுகிறது.

அதன்படி, இனி பேருந்து படிகட்டுகள் அருகில், வெளிப்புறத்தில் எந்த இடத்திலும் கைப்பிடி கம்பி இருக்காது. மாறாக பாதுகாப்பாக பேருந்தின் உள்பகுதியில் தடுப்புக் கம்பிகள் இடம்படிக்க உள்ளன.

மேலும் நடத்துநர் அமரும் இடத்துக்கு அருகே உள்ள ஜன்னல் கம்பிகள் அகற்றப்பட்டு, ஒரே முழுமையான கண்ணாடி அமைய இருக்கிறது.

ஏறும் பகுதியிலும், இறங்கும் பகுதியிலும் படிகட்டுகளை மூடும் வகையில், கதவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இந்த வசதியை அனைத்து பேருந்துகளிலும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நமது செய்தியாளர் வேல்முருகன் விளக்கும் கூடுதல் விவரங்களை பாருங்கள்..

எத்தனை முறை சொன்னாலும் கேட்காத சில மாணவர்கள் இனி ஃபுட் போர்ட்டில் பயணம் செய்ய முடியாத வகையில் புதிய ஏற்பாடுகள் செய்யப்பட இருப்பது, பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் தேவையற்ற டென்ஷனை குறைப்பதுடன், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், அதே நேரம் பள்ளி கல்லூரிக்கு மாணவர்கள் செல்லும் நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதும் பெற்றோரின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.

அளவிட முடியாத திறன் கொண்ட இளைஞர்களின் உயிர்கள் வெறும் பேருந்து படிகட்டு பயணத்தின்போது வீணாகக் கூடாது என்ற நோக்கில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கும் எம்டிசியின் முயற்சி பலன்தரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *