மாருதி காரை இவ்ளோ சூப்பரான மாத்தின கைகளுக்கு தங்க மோதிரம் போடலாம்! எவ்ளோ மோசமான ரோடா இருந்தாலும் சமாளிச்சிரும்
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஜிம்னி (Jimny)-யும் ஒன்று. இது ஓர் லைஃப்-ஸ்டைல் (Life Style) மற்றும் மிக சிறந்த ஆஃப்-ரோடு (Off-Road) பயன்பாட்டு வசதிகள் கொண்ட கார் மாடல் ஆகும். இந்த காரையே ஒட்டுமொத்த வாகன உலகமும் திரும்பி பார்க்கச் செய்கின்ற வகையில் அதன் உரிமையாளர் மாற்றியமைத்து இருக்கின்றார்.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் வேறு எந்த ஜிம்னி காராலும் செய்ய முடியாத செயல்களை எல்லாம் செய்யும் அளவிற்கு அந்த காரில் பல்வேறு மாற்றங்களை அவர் செய்திருக்கின்றார். இதனால் இன்னும் பலமடங்கு ஆஃப்-ரோடு திறன் கொண்ட ஜிம்னியாக அது மாறியிருக்கின்றது.
மேலும், இதில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மிகக் கடுமையான மாற்றங்கள் காரணமாக அந்த கார் சாலை பயன்பாட்டு வாகனம் என்பது மாறி அது முழுக்க முழுக்க சாகச பயன்பாட்டிற்கான வாகனமாக மாறி இருக்கின்றது. அதாவது, ஆஃப்-ரோடு மற்றும் ரேலி ஆகியவற்றிற்கு மட்டுமே பயன்படக்கூடிய வாகனமாக அது மாறி இருக்கின்றது.
இந்த திறனுக்காக ஜிம்னியில் மிகப் பெரிய மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்கள் சேர்ப்பு உள்ளிட்டவை செய்யப்பட்டு இருக்கின்றன. ரோலிங் கேஜ் உள்ளிட்டவைகூட இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. ஆகையால், இந்த கார் கரடு-முரடான பாதையை மட்டுமல்ல பாதையே இல்லா சாலைகளில்கூட பயணிக்கும்.
உதாரணமாக, பெரிய பெரிய பாறைகள் வழியில் குறுக்கே இருந்தால்கூட அவற்றை அசால்டாக கடந்து சென்றுவிடும். தனித்துவமான பாடி, சஸ்பென்ஷன் மற்றும் டயர் செட்-அப் ஆகியவற்றாலேயே இது சாத்தியமாகி இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, மாருதி சுஸுகி ஜிம்னிக்கு பிக்-அப் டிரக் அவதாரமும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
ஆகையால், ஐந்து பேர் பயணிக்கக் கூடிய இந்த கார் தற்போது இருவர் மட்டுமே பயணிக்கக் கூடியதாக மாறி இருக்கின்றது. இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி ஐந்து கதவுகள் கொண்ட கார் மாடலாகவே ஜிம்னி விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த சிறப்பையும் அது இழந்திருக்கின்றது. தற்போது மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றத்தால் அது இரண்டு கதவுகளை மட்டுமே கொண்டிருக்கின்றது.
இத்துடன், புதிய ஃப்யூவல் டேங்க் மற்றும் ஏஆர்பி ஏர் கம்பிரஷ்ஷர் ஆகியவையும் இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. மேலும், பின் பக்கத்தில் அடைக்க கண்ணாடி மற்றும் மெட்டல் ஷீட்டுகளையும் அவர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். தனா 44 சஸ்பென்ஷன், 3 அங்குல காயில்களுக்கு பதிலாக 5 அங்குல காயில்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன், 33.8 அங்குல ஆஃப்-ரோடு பயன்பாட்டு வசதிக் கொண்ட ரெனகேட் டயரும் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த ஒட்டுமொத்த மாற்றத்திற்கும் ஆன செலவு ரூ. 36 லட்சம் என கூறப்படுகின்றது. ஆகையால், இந்தியாவின் வித்தியாசமான பயன்பாட்டு வசதிக் கொண்ட காராக மட்டுமல்ல அதிக காஸ்ட்லியான காராகவும் ஜிம்னி மாறி இருக்கின்றது.
இதனை வழக்கமான சாலையிலும் பயன்படுத்த முடியும். ஆனால், அது சட்டப்பூர்வமானதாக இருக்காது. மேலும், இந்த வாகனத்தை வடிவமைத்தவர் இதனை மலையேறும் வாகனமாக மட்டுமே தயாரித்து இருப்பதால், இந்த காரை அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறி இருக்கின்றார். எஞ்சின் விஷயத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
அதில் எந்த மாற்றமும் செய்யப்பட்டு இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனே இந்த காரில் வழங்கப்படுகின்றது. இத்துடன், 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் மோட்டார் தேர்வு மட்டுமே ஜிம்னியில் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.