கூகுள் மேப்பை பயன்படுத்தி உங்கள் வாகனத்தின் எரிபொருளை சேமிக்க முடியும்…. எப்படி தெரியுமா?
கூகுள் மேப் அறிமுகமானதிலிருந்தே பயணம் செய்வது எளிமையாகியுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆண்டிராய்டு ஸ்மார்ட்போன்களில் உள்ள இந்த கூகுள் மேப் செயலியை பயன்படுத்தி, நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு சிறந்த பாதை எது என்பதையும், எவ்வுளவு நேரம் ஆகும் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். எந்தவொரு திட்டமும் இல்லாமல் பயணிக்கும் சுற்றுலாவாசிகளுக்கும் தெரியாத ஊருக்கு முதல்முறையாக வந்திருப்பவர்களுக்கும் மிகப்பெரும் உதவியாக இருந்து வருகிறது கூகுள் மேப். இந்நிலையில் பயணத்தின் போது எரிபொருளை மிச்சப்படுத்தும் பாதைகளை தெரியப்படுத்தும் புதிய வசதியை கொண்டு வந்துள்ளது கூகுள் மேப்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பாதை என அழைக்கப்படும் இந்த வசதி முதல்முறயாக 2022-ம் ஆண்டு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இனிமேல் save fuel என்ற இந்த ஆப்ஷனை கூகுள் மேப் உபயோகிக்கும் இந்தியர்களும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இந்த வசதியை நாம்தான் கூகுள் மேப் செயலியில் செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் உங்கள் வாகனத்தின் இஞ்சின் அமைப்பு மற்றும் பிற அம்சங்களை கணக்கில் கொண்டு எந்தப் பாதையில் சென்றால் எரிபொருளை மிச்சப்படுத்தலாம் என்பதை உங்களுக்கு தெரிவிக்கும். மேலும் நீங்கள் செல்லக்கூடிய பாதையில் உள்ள போக்குவரத்து நெரிசல், சாலையின் நிலை ஆகியவற்றையும் இந்த வசதி கணக்கில் கொள்ளும்.
இதையெல்லாம் பகுத்து ஆராய்ந்த பிறகு, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான எரிபொருள் மிச்சப்படுத்தும் பாதையையும் எவ்வளவு நேரத்தில் சென்றடையலாம் என்ற விவரத்தையும் தெரிவிக்கும். சில சமயங்களில் இது விரைவாக செல்லக்கூடிய பாதையை தவிர்த்து வேறு வழியாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
இந்த வசதியை வேண்டாம் என ஆஃப் செய்து வைத்திருந்தால், வழக்கமான விரைவாக செல்லக் கூடிய பாதையையே உங்களுக்கு கூகுள் மேப் காண்பிக்கும். எனினும் எரிபொருளை மிச்சப்படுத்தும் பாதைகள் என பச்சை இலை லோகோவில் ஹைலைட் செய்யப்படிருப்பதை உங்களால் பார்க்க முடியும்.
கூகுள் மேப்பில் இந்த வசதியை எப்படி ஆக்டிவேட் செய்வது?
உங்கள் மொபைலில் கூகுள் மேப் செயலியை திறந்து கொள்ளுங்கள்.
மேலே வலது ஓரத்தில் உங்கள் புரொஃபைல் படத்தை க்ளிக் செய்யுங்கள். .
செட்டிங்ஸில் நேவிகேஷன் என்ற ஆப்ஷனுக்கு செல்லுங்கள்
அதில் ரூட் ஆப்ஷன் (Route Options) என்பதை தேர்வு செய்யுங்கள்.
பின்னர் அதில் எரிபொருள் மிச்சப்படுத்தும் பாதை (Prefer fuel-efficient routes) என்பதை தேர்வு செய்யுங்கள்.
அடுத்த பக்கத்தில் உங்கள் வாகனத்தின் இஞ்சின் வகையை தேர்வு செய்யுங்கள்.
எரிபொருள் மிச்சப்படுத்தும் வசதியை கூகுள் மேப்பில் எப்படி பயன்படுத்துவது?
கூகுள் மேப் செயலியை திறந்துகொள்ளுங்கள்
நீங்கள் செல்ல வேண்டிய இடத்தின் பெயரை செர்ச் பாக்ஸில் டைப் செய்யுங்கள் அல்லது மேப்பில் தேர்ந்தெடுங்கள்
பின்னர் கீழே இடது புறத்தில் உள்ள Directions என்பதை க்ளிக் செய்யுங்கள்.
மேலே ஸ்வைப் செய்து Change Engine Type என இருக்கிறதா பாருங்கள்.
உங்கள் வாகனம் பெட்ரோலா, டீசலா, ஹைபிரிடா அல்லது எலக்ட்ரிக்கா என்பதை தேர்வு செய்யுங்கள்.
உங்கள் வாகனம் எந்த இஞ்சின் வகை என நீங்கள் தேர்வு செய்யாவிட்டால், உங்களுடைய வாகனம் பெட்ரோலில் இயங்குகிறது என தானாகவே கூகுள் மேப் எடுத்துக்கொள்ளும். இதில் உள்ள சின்ன குறை என்னவென்றால், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான எரிபொருள் மிச்சப்படுத்தும் பாதையில் எங்கு சார்ஜிங் நிலையங்கள் இருக்கின்றன என்பதை நம்மால் பார்க்க முடியாது.