இஷ்டத்துக்கு பேட்டை வீசலாமா ராஜா.. ஜோ ரூட் அடித்த ஸ்வீப் ஷாட்.. பேஸ் பால் சோலியை முடித்த ஜடேஜா!
ஐதராபாத் : இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா வைத்த பொறியில் சிக்கி இங்கிலாந்து அணியின் அனுபவ வீரர் ஜோ ரூட் 29 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஐதராபாத் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்பின் தொடக்க வீரர்களான வந்த கிராலி – டக்கெட் கூட்டணி அதிரடியாக ரன்களை குவித்தது. இதன்பின் ஸ்பின்னர்கள் அட்டாக்கில் வந்ததும் வழக்கம் போல் பதற்றத்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தனர்.
அதிரடியாக ஆடிய டக்கெட் 35 ரன்களிலும், போப் 1 ரன்னிலும், கிராலி 20 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். விக்கெட் இழப்பிற்கு 55 ரன்களுக்கு சேர்த்திருந்த நிலையில் இருந்து 60 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது. இதன்பின் இணைந்த அனுபவ வீரர் ஜோ ரூட் – பேர்ஸ்டோவ் இருவரும் இந்திய ஸ்பின்னர்களை கவனமாக எதிர்கொண்டனர். பேர்ஸ்டோவ் எளிதாக ஒரு ரன்னை எடுத்து வந்த நிலையில், ரூட் ஸ்வீப் ஷாட்களையே விளையாடி வந்தார்.
இதனால் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 108 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இரு அணிகளும் சரிக்கு சமமாம போட்டியிட்ட முதல் செஷன் ரசிகர்களுக்கும் விறுவிறுப்பாக அமைந்தது. இந்த நிலையில் 2வது செஷன் மீண்டும் தொடங்க, அக்சர் படேல் – ஜடேஜா இருவரும் அட்டாக் செய்தனர். இருப்பினும் கவனமாக ஆடிய ரூட் – பேர்ஸ்டோவ் கூட்டணியின் பார்ட்னர்ஷிப் 50 ரன்களை கடந்து சென்றது. இந்த நிலையில் அக்சர் படேல் வீசிய பந்தில் பேர்ஸ்டோவ் 58 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து போல்டாகி வெளியேறினார்.
இதையடுத்து ஜோ ரூட் பேஸ் பால் அணுகுமுறையை கைவிட்டு கிட்டத்தட்ட பாரம்பரிய டெஸ்ட் ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். ஸ்பின்னர்களை தடுத்து ஆடுவது, ஸ்வீப் ஷாட் அடிப்பது என்று விளையாட தொடங்கினார். இதனை கணித்த ஜடேஜா, ஜோ ரூட் ஸ்வீப் ஷாட்டை ஆட வேண்டும் என்பதற்காக சில பந்துகளை ஃபுல் லெந்தில் வீசி கொண்டே இருந்தார். இதனால் ஜோ ரூட் எளிதாக சில ரன்களை எடுக்க தொடங்கினார். இந்த நிலையிலொ ஜடேஜா ஃபுல் லெந்தில் வீசாமல் ஒரு பந்தை மட்டும் கூடுதல் வேகத்தில் கொஞ்சம் ஷார்ட்டாக வீசினார்.
அதனை கணிக்காமல் ஜோ ரூட் பந்தை வீசுவதற்கு முன்பாக ஸ்வீப் ஷாட்டிற்கு செல்ல, அந்த பந்து டாப் எட்ஜாகி மேல் எழுந்தது. அதனை ஷார்ட் ஃபைன் லெக் திசையில் நின்றிருந்த பும்ரா எளிதாக பிடித்து அசத்தினார். இதனால் ஜோ ரூட் 60 பந்துகளில் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கிட்டத்தட்ட பேர்ஸ்டோவ் மற்றும் ஜோ ரூட் இருவரும் பேஸ் பால் அணுகுமுறையை மறந்து பாரம்பரிய முறையிலான டெஸ்ட் ஆட்டத்தை விளையாடினர். இதனால் இந்திய ரசிகர்கள் பேஸ் பால் ஆட்டம் இந்திய மைதானங்களில் செல்லாது என்று கிண்டல் செய்து வருகின்றனர்.