இந்த ஒரு ரயில் டிக்கெட்டில் 56 நாள் பயணம் செய்யலாம்.. எப்படி தெரியுமா ?
ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து தருகிறது. ஆனால் பெரும்பாலான பயணிகளுக்கு ரயில்வே சலுகைகளை பற்றி பெரிதும் தெரியாது. அத்தகைய சேவைகளில் ஒன்றுதான் சர்குலர் ஜர்னி டிக்கெட். இது ஒரு சிறப்பு சலுகை டிக்கெட் ஆகும். இது சாதாரண டிக்கெட்டை விட முற்றிலும் வேறுபட்டது. ஏனெனில் இந்த டிக்கெட் மூலம் ஒருவர் சுமார் 56 நாட்களுக்கு ரயிலில் பயணம் செய்யலாம். அதுவும் ஒரு ரயில் அல்ல, பல ரயில்களில் பயணிக்கலாம்.இதனை சுற்று பயண டிக்கெட் என்றும் சொல்வார்கள்.
அதன்படி, சுற்று பயண டிக்கெட் மூலம் பயணிகள் 8 வெவ்வேறு ரயில் நிலையங்களில் இருந்து 56 நாட்களுக்கு பயணம் மேற்கொள்ளலாம். அதுமட்டுமன்றி, இடையில் பல ரயில்களில் ஏறி இறங்கலாம். இந்த டிக்கெட் யாத்ரீகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.பொதுவாக நீண்ட நாட்கள் பயணிக்க வேண்டும் என்றால் வேவ்வேறு ரயில்களுக்கு தனித்தனி டிக்கெட்டுகள் எடுக்க வேண்டிய தேவை இருக்கும். அது நமது செலவை அதிகப்படும். ஏனென்றால் அதற்கான கட்டணம் கூடுதல் கிலோமீட்டர் அடிப்படையில் இருல்லாமல், புதிய பயணத்திற்கான தொடக்க புள்ளியாக கணக்கிடப்பட்டு, அதிலிருந்து பயணிக்கும் கிலோமீட்டர் என்ற அளவில் இருக்கும். ஆனால் சர்க்குலர் பயண டிக்கெட்டுகள் ‘நீண்ட தூர பயணிக்கும் போது கிடைக்கும் குறைவான கட்டணங்களின்’ நன்மையை வழங்குகின்றன, அவை வழக்கமான புள்ளி-க்கு-புள்ளி கட்டணத்தை விட மிகக் குறைவு. எந்த வகுப்பிலும் பயணம் செய்ய சர்க்குலர் பயண டிக்கெட்டுகளை வாங்கலாம்.
சுற்று பயண டிக்கெட்டின் செல்லுபடியாகும் காலம் 56 நாட்கள். சுற்றுப்பயண டிக்கெட்டை உங்களால் டிக்கெட் கவுண்டரில் இருந்து நேரடியாக வாங்க முடியாது. இதற்கு முதலில் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். உங்கள் பயணம் குறித்த முழு தகவலுடன் முக்கிய ரயில் நிலையங்களில் பிரிவு வணிக மேலாளர் அல்லது நிலைய மேலாளருக்கு டிக்கெட் கோரிக்கை வழங்குவதன் மூலம் உங்களால் இந்த சுற்றுப்பயண டிக்கெட்டை வாங்க முடியும்.
தமிழகத்தை பொறுத்தவரை மதுரை, திருச்சி, கோவை, சேலம் போன்ற ரயில் நிலையங்களில் நேரடியாகச் சென்று ஆஃப் லைன் முறையில் டிக்கெட் எடுக்க வேண்டும். இதற்காக உள்ள விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்ய வேண்டும். நீங்கள் புறப்படும் நாளிலிருந்து எந்த ரயிலில் கிளம்புகிறீர்கள் எதுவரை செல்கிறீர்கள் அங்கிருந்து எந்த ரயிலுக்கு மாறுகிறீர்கள், பின்னர் எங்கெங்கு எந்த ரயிலில் எந்தெந்த நாளில் சென்று எப்பொழுது திரும்பி வருகிறீர்கள் என்பதை அதில் குறிப்பிட வேண்டும்.