உங்க பொங்கச் சோறும் வேணாம் பூசாரித்தனமும் வேணாம்.. பாகிஸ்தான் அணியிடமிருந்து தலைதெறிக்க ஓடிய வாட்சன்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சனை நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் அமைப்பு முயற்சி செய்தது. அவருக்கு பெரிய தொகையை அளிக்க முன் வந்தது. ஆனால், விட்டால் போதும் என ஷேன் வாட்சன் அந்த வாய்ப்பை மறுத்து இருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணியின் ஆல் – ரவுண்டராக இருந்த ஷேன் வாட்சன், ஐபிஎல் தொடரில் முத்திரை பதித்தார். கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய அவர் அத்துடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் ஓராண்டு உலகம் முழுவதும் நடைபெற்ற டி20 தொடர்களில் பங்கேற்று வந்தார்.

தற்போது அவர் பயிற்சியாளராக மாறி இருக்கிறார். பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் தான் முன்பு ஆடிய குவெட்டா கிளேடியேட்டர்ஸ் அணியின் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே பிரபலமாக மாறி இருக்கிறார். 2019இல் குவெட்டா அணிக்காக ஆடிய ஷேன் வாட்சன் அப்போது அந்த அணிக்கு கோப்பை வென்று கொடுத்தார். அதன் பின் ஐந்து ஆண்டுகளாக அந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் இருந்தது.

இந்த நிலையில், ஷேன் வாட்சன் அந்த அணியின் பயிற்சியாளராக வந்த உடன் கேப்டன் சர்ஃபராஸ் கானை நீக்கி விட்டு, தென்னாப்பிரிக்க வீரர் ரைலி ரோஸ்ஸோவை கேப்டனாக நியமித்தார். அதன் பின் அந்த அணி பிளே-ஆஃப் சுற்று வரை முன்னேறி எலிமினேட்டர் சுற்றில் தோல்வி அடைந்தது.

பயிற்சியாளராக ஷேன் வாட்சன் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதை பார்த்த பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அவரை பாகிஸ்தான் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் பயிற்சியாளராக நியமிக்க முடிவு செய்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. அவருக்கு ஆண்டுக்கு இந்திய மதிப்பில் 16 கோடி சம்பளம் அளிக்க முன்வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், ஷேன் வாட்சனுக்கு ஐபிஎல் வர்ணனையாளர் பணி மற்றும் அமெரிக்க டி20 தொடரான மேஜர் லீக் தொடரில் சான் ஃபிரான்சிஸ்கோ அணியின் பயிற்சியாளர் பணி என பல்வேறு பணிகள் உள்ளன. அதை பாதியில் விட்டுச் செல்ல முடியாது எனக் கூறி அவர் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக முடியாது எனக் கூறி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முந்தைய பயிற்சியாளர்கள் மீது எழுந்த விமர்சனங்கள் மறக்க முடியாதவை. ஒவ்வொரு முறையும் வெளிநாட்டு பயிற்சியாளர் பாகிஸ்தான் அணிக்கு நியமிக்கப்படும் போதும், அவர்களை வரவேற்பதும், உலகக்கோப்பை போன்ற தொடர்களில் தோல்வி அடைந்தால் பயிற்சியாளர் மீது கடும் குற்றம் சுமத்தி துரத்தி விடுவதும் வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் ஷேன் வாட்சன் பாகிஸ்தான் அணியிடம் இருந்து தப்பி இருக்கிறார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *