ஆமை போல் நகர்ந்துதான் செல்ல வேண்டியிருக்கு!! இந்தியாவின் மோசமான டிராஃபிக் நகரத்தை பற்றி தெரியுமா?

போக்குவரத்தில் உலகளவில் மோசமான நகரங்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. இந்த லிஸ்ட்டில் மொத்தம் 4 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வை பற்றியும், இந்த லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ள இந்திய நகரங்களை பற்றியும் இனி பார்க்கலாம்.

உலகின் மிக மோசமான போக்குவரத்து நெரிசலை சந்திக்கும் நகரங்கள் லிஸ்ட்டில் கடந்த சில வருடங்களாகவே இங்கிலாந்து தலைநகர் லண்டன் முதலிடத்தை வகித்து வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டிலும், வாகன ஓட்டிகள் மிக மோசமான போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ளும் நகரங்களில் முதலிடத்தை பிடித்துள்ள லண்டனில் 10கிமீ தொலைவிற்கு பயணிக்க சராசரியாக 37 நிமிடங்கள் 20 வினாடிகள் தேவைப்படுவதாக சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

நம் இந்தியாவை பொறுத்தவரையில், பெங்களூரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதை இந்த ஆய்வு ஹைலைட் படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் பெங்களூரில் 132 மணிநேரத்தை போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் வாகன ஓட்டிகள் இழந்துள்ளனர். பெங்களூரில் 10கிமீ தொலைவிற்கு பயணிக்க சராசரியாக 28 நிமிடங்கள் 10 வினாடிகள் தேவைப்படுவதாக இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் பெங்களூரில் வாகன ஓட்டிகள் சராசரியாக மணிக்கு 18கிமீ வேகத்தில் மட்டுமே இயங்க முடிவதாகவும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. உலகின் மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய டாப்-10 நகரங்கள் லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ள மற்றொரு இந்திய நகரம் புனே ஆகும்.

டாம்டாம் வெளியிட்டுள்ள லிஸ்ட்டில் பெங்களூர் 6வது இடத்தை பிடித்திருக்க, புனே 7வது இடத்தை பிடித்துள்ளது. புனேவில் கடந்த ஆண்டில் 128 மணிநேரத்தை போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் செலவிட்டு உள்ளதாக கூறும் இந்த ஆய்வறிக்கை, இந்த மஹாராஷ்டிரா நகரத்தில் வாகன ஓட்டிகள் பீக் ஹவர்ஸில் 10கிமீ-க்கு பயணிக்க சராசரியாக 27 நிமிடங்கள் 50 வினாடிகளை செலவிடுவதாக குறிப்பிட்டுள்ளது.

ரஷ் ஹவர்ஸில் புனேவில் 19kmph வேகத்திற்கு மேல் வாகன ஓட்டிகளால் இயங்க முடிவதில்லை என்கிற விபரத்தையும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. டாம்டாமின் டாப்-100 லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ள மற்ற 2 இந்திய நகரங்கள் புதுடெல்லி மற்றும் மும்பை ஆகும். இவை இரண்டும் முறையே 44வது மற்றும் 55வது இடங்களை பிடித்துள்ளன. தலைநகர் டெல்லியில் 10கிமீ பயணத்திற்கு சராசரியாக 21 நிமிடங்கள் 40 வினாடிகள் தேவைப்படுகிறது.

இருப்பினும், 2022ஆம் ஆண்டை விட இது 30 நிமிடங்கள் விரைவானது ஆகும். அதாவது, டெல்லியில் கடந்த ஆண்டில் போக்குவரத்து நெரிசல் கொஞ்சம் குறைந்துள்ளது. 2023இல் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சமயத்தில் டெல்லியில் 81 மணிநேரங்களை இழந்துள்ள வாகன ஓட்டிகள் அத்தகைய சமயத்தில் 24kmph வேகத்தில் மட்டுமே இயங்க முடிந்துள்ளது. மும்பையில் 10கிமீ-க்கு சராசரியாக 21 நிமிடங்கள் 20 வினாடிகள் தேவைப்படுவதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *