ஹீரோவில் இதைவிட கம்மியான விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்காது!! இப்போதே ஒன்றை புக் பண்ணி போடுங்க!
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் அதன் விடா வி1 பிளஸ் (Vida V1 Plus) எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனையை மீண்டும் துவங்கியுள்ளது. இந்த புதிய ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எந்த விலையில் வாங்கலாம்? என்பதையும், இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப் ஆகும். ஒவ்வொரு மாதமும் அசால்ட்டாக ஏறக்குறைய 5 லட்ச 2-வீலர்களை விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக, ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் மட்டும் சராசரியாக மாதத்திற்கு 2 லட்ச யூனிட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும், எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் நீண்ட வருட ஆலோசனைகளுக்கு பிறகே ஹீரோ நிறுவனம் இறங்கியது.
மற்ற 2-வீலர் நிறுவனங்களை போன்று, எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முதலாவதாக ஹீரோ நிறுவனம் களமிறக்கியது. எல்லாவற்றையும் விட முக்கியமாக, எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்வதற்காகவே ‘விடா’ என்ற சப்-பிராண்டை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிமுகம் செய்தது. விடா பிராண்டில் இருந்து முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வி1 என்கிற பெயரில் கடந்த 2022 அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
விடா வி1 பிளஸ் மற்றும் வி1 புரோ என்கிற இரு விதமான வேரியண்ட்களில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்தது. ஆனால், இதில் வி1 பிளஸ் வேரியண்ட்டின் விற்பனையை சில மாதங்களில் ஹீரோ நிறுவனம் நிறுத்திக் கொண்டது. இந்த நிலையில் தற்போது, விடா வி1 பிளஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரூ.1.15 லட்சம் என்கிற கவர்ச்சிக்கரமான விலையில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது அரசாங்கத்தின் மானியம் கழிய மற்றும் ஸ்கூட்டரின் சார்ஜருக்கான தொகையை உள்ளடக்கிய விலை ஆகும். ரூ.1.15 லட்சம் என்கிற குறைந்த விலையின் மூலம் ஏத்தர் 450எஸ், ஓலா எஸ்1 ஏர் உள்ளிட்ட மற்ற விலை குறைவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு விற்பனையில் விடா வி1 பிளஸ் போட்டியாக விளங்கவுள்ளது.
விடா வி1 பிளஸ் ஸ்கூட்டரின் ரூ.1.15 லட்சம் விலை ஆனது மத்திய அரசின் ஃபேம்-2 மானியம் கழிக்கப்பட்ட பின் கிடைக்கும் விலை ஆகும். மாநில அரசாங்கத்தின் மானியங்களை சேர்த்தால், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இன்னும் குறைவாக வரும். இந்த வகையில் பார்த்தால், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் விடா வி1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டருடன் ஒப்பிடுகையில் வி1 பிளஸ் ஆனது சுமார் ரூ.30,000 குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வி1 பிளஸ் மற்றும் வி1 புரோ இந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் தோற்றத்தில் ஒரே மாதிரியாக உள்ளன. அதேபோல், 7-இன்ச் டச் ஸ்க்ரீன் டேஸ்போர்டு உள்பட தொழிற்நுட்ப அம்சங்களிலும் இரண்டிற்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. இந்த இரு இ-ஸ்கூட்டர்களிலும் அதிகப்பட்சமாக மணிக்கு 80கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். இவை இரண்டிற்கும் இடையே எங்கு வித்தியாசம் உள்ளது என்றால், பொருத்தப்படும் பேட்டரியின் திறனில் ஆகும்.
அதாவது, விலை குறைவான வி1 பிளஸ் ஸ்கூட்டரில் 3.44 kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 100கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். அதுவே, வி1 புரோ ஸ்கூட்டரில் அளவில் சற்று பெரிய 3.94 kWh பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக 110கிமீ வரையில் ஸ்கூட்டரை இயக்கிச் செல்லலாம். ஆனால் இந்த இரு ஸ்கூட்டர்களிலும் ஒரே அளவிலான திறனில் 6 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படுகிறது.