இதவிட கம்மி விலையில எங்கேயுமே கிடைக்காது! குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் மேட் பெயிண்ட் கொண்ட கார்கள்
வாகனம் வாங்கும்போது, அந்த வாகனத்தில் இந்த அம்சம் இருக்கிறதா?.. அந்த அம்சம் இருக்கிறதா?.. என தேடிப் பார்ப்பவர்கள் இருப்பதைப் போலவே, வாகன உற்பத்தி நிறுவனம் தங்களுக்கு பிடித்தமான நிற தேர்வை வழங்குகின்றனவா என நிறத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர்களும் இந்த உலகத்தில் இருக்கதான் செய்கிறார்கள்.
என்னதான் பிடித்தமான கார் மாடலாக இருந்தாலும், அதில் தங்களுக்கு பிடித்த வண்ண ஆப்ஷன் வழங்கப்படவில்லை எனில் அந்த காரை வாங்கும் எண்ணத்தையே கை விட்டவர்களைக் கூட இந்த உலகம் சந்தித்து இருக்கின்றது. இதேபோல், தங்களுக்கு பிடித்த கார் மாடலை வாங்கி தங்களுக்கு பிடித்தமான வண்ணத்திற்கு மாற்றி பயன்படுத்துவர்களும் நம்மில் ஏராளம்.
இந்த அளவிற்கே அதிக முக்கியத்துவம் வண்ணங்களுக்கு இந்தியர்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதன் விளைவாகவே இப்போது கார் உற்பத்தியாளர்கள் பரந்த அளவில் வண்ண ஆப்ஷன்களை தங்களின் புதுமுக கார்களில் வழங்கத் தொடங்கி இருக்கின்றனர். அந்தவகையில், இந்தியர்களைக் கவரும் விதமாக சில வாகன உற்பத்தியாளர் குளாஸ்ஸி பெயிண்ட் ஸ்கீமைப் போலவே மேட் ஃபினிஷிங் கொண்ட வண்ண ஆப்ஷனையும் அதிகளவில் வழங்கத் தொடங்கியுள்ளனர்.
ஆனால், இந்த மேட் ஃபினிஷிங் வண்ண ஆப்ஷன் கொண்ட கார்கள் அதிக விலையில் விற்பனைக்குக் கிடைப்பதாக நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வண்ண ஆப்ஷனை சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் பட்ஜெட் விலைக் கார் மாடல்களிலும் வழங்கிக் கொண்டிருக்கின்றனர். அந்த கார் மாடல்கள் எவை? அவற்றின் விலை மற்றும் சிறப்புகள்? என்பது போன்ற முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
கியா செல்டோஸ் எக்ஸ்-லைன் (Kia Seltos X-Line): கியா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் முன்னணி மாடலாக செல்டோஸ் இருக்கின்றது. இதன் உயர்நிலை தேர்வே செல்டோஸ் எக்ஸ்-லைன் ஆகும். இந்த தேர்விலேயே கியா மேட் வண்ண தேர்வை வழங்குகின்றது. மேட் கிரே எனும் தேர்வே அது ஆகும். இது ஓர் பிரத்யேக பதிப்பு என்பதால் இதன் விலை சற்று அதிகமாக உள்ளது.
கியா செல்டோஸ் எக்ஸ்-லைன் ரூ. 19.60 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதேவேளையில், இதன் டாப் ஸ்பெக்கின் விலை ரூ. 20.30 லட்சம் ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். இந்தியாவில் கியா செல்டோஸுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இதனை இரட்டிப்பாக்கும் விதமாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டதே செல்டோஸ் எக்ஸ்-லைன் ஆகும்.
கியா சொனெட் எக்ஸ்-லைன் (Kia Sonet X-Line): செல்டோஸ் கார் மாடலை தொடர்ந்து சொனெட்டிலும் மேட்-ஃபினிஷிங் வண்ண ஆப்ஷனை கியா வழங்குகின்றது. ஆனால், சொனெட் எக்ஸ்-லைன் தேர்வில் மட்டுமே இதை பெற்றுக் கொள்ள முடியும். இதன் ஆரம்ப விலை ரூ.13.89லட்சம் ஆகும். உச்சபட்ச விலை ரூ.14.89லட்சமாகும். இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். விலைக்கு ஏற்ப இந்த காரில் சிறப்பம்சங்கள், குறிப்பாக, பிரீமியம் தர அம்சங்கள் அதிகளவில் இடம் பெற்றிருக்கும்.
ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் ஜிடி எட்ஜ் பிளஸ் மேட் எடிசன் (Volkswagen Virtus GT Edge Plus Matte Edition): இந்தியாவில் மேட் ஃபினிஷிங் பெயிண்ட் ஸ்கீமில் விற்பனைக்குக் கிடைக்கும் செடான் ரக கார் இதுவாகும். மேட் பெயிண்ட் ஸ்கீமில் மட்டுமே விர்சுஸ் ஜிடி எட்ஜ் பிளஸ் மேட் எடிசன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் விலை ரூ.17.62லட்சம் ஆகும். எலகண்ட் கார்பன் ஸ்டீல் கிரே மேட் ஃபினிஷ் வண்ண ஆப்ஷனே இதில் வழங்கப்படுகின்றது.
ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஜிடி எட்ஜ் பிளஸ் மேட் எடிசன் (Volkswagen Taigun GT Edge Plus Matte Edition): ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலின் சிறப்பு பதிப்பாக ஜிடி எட்ஜ் பிளஸ் மேட் எடிசன் காட்சியளிக்கின்றது. இது ரூ. 21.77 லட்சம் தொடங்கி ரூ. 23.15 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
ஸ்கோடா ஸ்லேவியா மேட் எடிசன் (Skoda Slavia Matte Edition) மற்றும் குஷாக் மேட் எடிசன் (Kushaq Matte Edition): ஃபோக்ஸ்வேகனைப் போல ஸ்கோடாவும் அதன் செடான் ரக கார் மாடலான ஸ்லேவியா மற்றும் எஸ்யூவி கார் மாடலான குஷாக்-இல் மேட் எடிசனை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதில் ஸ்லேவியா ரூ.15.52லட்சம் தொடங்கி ரூ.19.12லட்சம் வரையிலும், குஷாக் ரூ.16.19லட்சம் என்கிற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.